திங்கள், 10 நவம்பர், 2014

முக்காலம் சொன்ன அய்யா வைகுண்டர்!

முக்காலம் சொன்ன அய்யா வைகுண்டர்!


ல நாள் பட்டினி போடப்பட்ட புலி, கூண்டுக்குள் பலமாக உறுமிக்கொண்டி ருந்தது. நடக்கப்போகும் விபரீதத்தைக் காண வழக்கம்போல் திரண்டிருந் தனர் பொதுமக்கள். சிறிது நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப் பட்டது.
குற்றவாளி என்று பொய்யாகக் குற்றம்சாட்டி இழுத்துவரப்பட்டார் அந்த மகான். கருணை வழியும் அவரது முகத்தில் துளியும் பயமில்லை. தெய்வீகப் பேரொளி அவரது முகத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. புன்னகை சிந்தியபடியே, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்கத் தயாராக வந்தார்.
கூடியிருந்த மக்களில், அந்த மகானுக்கு ஆதரவானவர்கள் பலர் இருந்தார்கள். ‘கலியை அழிக்க அவதாரம் எடுத்த இறைவனையே இந்தக் கலிநீசன்கள் தீண்டப் பார்க்கிறார்களே…’ என்று அவர்கள் கலங்கினாலும், அந்த மகானுக்கு எதுவும் நேராது என்கிற நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது.

தண்டனையை நிறைவேற்றுவதற்காக இழுத்து வரப்பட்ட மகானை, புலியின் கூண்டுக்குள் தள்ளிவிட்டார்கள். அது, அவரை அடித்துக் கொன்று தனது உணவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்கள் அந்த மகானுக்கு விதித்திருந்த கொடூர தண்டனை. ஆனால், அந்த மகான் கலியை அழிக்க வந்தவர் ஆயிற்றே! அவரை நெருங்கியதும், பாய வேண்டிய புலி, பூனைக்குட்டி போன்று அவருக்கு அருகில் வந்து சாதுவாகப் படுத்துக்கொண்டது. அதற்குத் தடவிக்கொடுத்துவிட்டு, புலிக்கூண்டில் இருந்து வெளியே வந்தார் மகான். அவரை எதிரியாக நினைத்தவர்கள்கூடத் தங்களை அறியாமல் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.
இது மட்டுமா… அந்த மகானின் அற்புதம்?
வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் திருமண வாழ்க்கை கைகூடாமல், முதிர் கன்னியாகிவிட்ட கோவில்பிள்ளை என்கிற பெண்ணுக்கு அதிசயமாக நல்ல வசதியான வரன் ஒன்று தேடிவந்தது. ஆனால், அந்த மாப்பிள்ளைக்குத் தீராத நோய் இருந்தது. எனினும், எப்படியாவது தங்கள் மகன் மூலம் வம்சம் தழைக்கவேண்டும் என்று விரும்பிய மாப்பிள்ளை வீட்டார், கோவில் பிள்ளையைப் பெண் பார்க்க வந்தனர்.
அதுவரை வந்த வரன்கள் எல்லாம் அதிக வரதட்சணை கேட்டதால் திருமணம் தட்டிப்போய், மகளுக்கு இனி திருமணமே நடக்காதோ என்று அச்சப்பட்டுக்கொண்டு இருந்த அவளது பெற்றோர், தேடி வந்த மாப்பிள்ளை எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி, அவனுக்குத் தங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டியதுதான் என்கிற முடிவுக்கு வந்தனர். அவர்கள் விருப்பப்படியே திருமணமும் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தான் கோவில்பிள்ளையின் கணவன். எவ்வளவோ மருத்துவம் பார்த்தும், அவனால் படுக்கையில் இருந்து எழுந்திருக்கக்கூட முடியவில்லை. அவன் வாழ்க்கை அவ்வளவுதான் என்று எல்லோரும் முடிவு செய்துவிட்ட நிலையில், அந்த மகான் பற்றி ஒருவர் சொல்ல, அவரைத் தேடி ஓடினாள் கோவில்பிள்ளை. அவரிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள்.
திருநாமக் கட்டியை தண்ணீரில் கரைத்த அந்த மகான், ‘இதை உன் கணவனுக்குக் கொடு. வந்த நோய் காணாமல் போகும்!” என்று கூறி அனுப்பிவைத்தார். மகான் சொன்னபடியே கணவனுக்கு அதைத் தந்தாள் அவள். என்ன ஆச்சரியம்..! உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவளது கணவன் படிப்படியாகக் குணம் பெற்று எழுந்தான். இருவரும் நெடுங்காலம் சுகமாய் வாழ்ந்தனர்.
- இப்படி, அந்த மகான் நிகழ்த்திய அற்புதங்களின் பட்டியல் ரொம்பவே நீளம்.
இந்த அற்புதங்கள் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த மகான் அருளும் தருமபதிக்கு (கோயில்) வந்தால், இதைக் கண்கூடாகக் காணலாம், நீங்களும்!
சரி, யார் அந்த மகான் என்கிறீர்களா?
நடந்தது, நடந்துகொண்டிருந்தது மட்டுமின்றி, நடக்கப் போவதையும் துல்லியமாகச் சொன்ன சுவாமி அய்யா வைகுண்டர்தான் அவர். இயற்கை எழில் சூழ்ந்த சாமித்தோப்பு என்னும் கிராமத் துக்கு- மக்களோடு மக்களாக அந்த மகான் வாழ்ந்த தலத்துக்கு நாமும் சென்று வருவோமா?

நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலையில், சுசீந்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஈத்தங்காடு என்னும் ஊர். இங்கிருந்து 3 கி.மீ. பயணித்தால் சாமித்தோப்பை அடையலாம். இயற்கை எழில் கொஞ்சும் தென்னந்தோப்புகள் நிறைந்த இந்த அழகிய கிராமம், இந்தியா முழுக்கப் பரவி வியாபித்துள்ள சுவாமி அய்யா வைகுண்டரின் தருமபதிகளுக்கு எல்லாம் தலைமைப்பதியாகத் திகழ்கிறது.
அய்யா வைகுண்டரின் தருமபதிக்குள் நுழைவதற்கு முன்பாக, அவர் உருவாக்கிய முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்தக் கிணற்றை வலம் வந்து வழிபட்ட பிறகே தருமபதிக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள் பக்தர்கள். எந்தவித வேறுபாடும் இன்றி எல்லா மக்களும் பயன்படுத்துவதற்காக அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய பொதுக்கிணறுதான் இந்த முத்திரிக் கிணறு. முத்திரி என்றால், ‘உத்தரவாதம் தருதல்’ அல்லது ‘நியமித்தல்’ என்று பொருள். அய்யா வைகுண்டரின் தருமபதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் முத்திரிக் கிணறு இருக்கும்.
முத்திரிக் கிணற்றில் புனித நீராடிவிட்டு, அய்யா வைகுண்டரின் தருமபதியை நோக்கிச்சில அடிகள் எடுத்து வைத்ததும், தகதகக்கும் பொன்வாசல் பளிச்சிடுகிறது. உள்ளே நுழை கிறோம். அய்யா வைகுண்டர் தவம் இருந்த வடக்குவாசல், ஏழு நிலை ராஜகோபுரம் தாண்டி, தருமபதியின் கிழக்குப் பார்த்த முகப்பு வாசலை அடைகிறோம். முகப்பு வாசலில் இருந்தே அய்யா வைகுண்டரைத் தரிசிக்கலாம். கொடிமரத்தைக் கடந்து தியான மண்டபத்தை அடைந்ததும், அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கிறோம்.

பொதுவாக, கோயில்களில் தெய்வங்களை அழகுத் திருமேனிகளில் பார்த்துப் பழக்கப் பட்டிருப்போம். ஆனால், இங்கே அய்யா வைகுண்டரின் திருமேனி முற்றிலும் வித்தியாசமானது. ஒரு நாற்காலியில் அய்யா வைகுண்டர் இருப்பதாக பாவித்து, அவர் பயன் படுத்திய பொருட்களை மாத்திரமே வைத்து வழிபடுகிறார்கள். நாற்காலிக்குப் பின்புறம் ஆளுயர நிலைக்கண்ணாடி இருக்கிறது. ‘நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’ என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு. அதனாலேயே இப்படியரு வழிபாட்டு முறை! நிலைக் கண்ணாடி முன்பு தீபத்தை ஏற்றிவைத்து, இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்தவரும் அவரே! ‘கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்’ என்பதும் அய்யா வைகுண்டரின் வாக்கு.
உருவ வழிபாடு வேண்டாம் என்பது அய்யா வைகுண்டரின் விருப்பம் என்பதால், அதன்படியே சாமித்தோப்பு உள்ளிட்ட அய்யா வைகுண்டரின் எல்லாத் தருமபதிகளிலும் இந்த வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகிறது.
அய்யா வைகுண்டரின் பள்ளியறையை வலம் வரும் வழியில் உத்ஸவ மூர்த்தியைத் தரிசிக்கிறோம். அடுத்ததாக, அய்யா வைகுண்டர் மானிட அவதாரத்தில் பயன்படுத்திய கட்டில் வைக்கப்பட்டுள்ள அறையைக் காணலாம்.
பள்ளியறை தரிசனம் முடித்ததும், மறுபடியும் தியான மண்டபம் வழியாக வந்து, தருமபதியின் உள் பிராகாரத்தை வலம் வரலாம். அவ்வாறு வலம் வருகையில், கேரள கட்டடக்கலை முறையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கருவறையின் பொன் விமானத்தைத் தரிசிக்கலாம்.
தருமபதி மட்டுமல்ல, இங்கே பின்பற்றப் படும் அத்தனை வழிபாட்டு முறைகளும் வித்தியாசமாக இருக்கின்றன. தீப ஆராதனை கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். தேங்காயை இங்கே உடைப்பது உயிர்ப் பலி கொடுப்பதற்குச் சமம் என்பதால், அப்படிச் செய்வதில்லை. கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி ஆகியவற்றுக்கும் இங்கே இடமில்லை.
அப்படியென்றால், தருமபதிக்கு வரும்போது என்னதான் கொண்டு வரவேண்டும் என்கிறீர்களா?
வெற்றிலை- பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சைப் பழம் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் போதும். இவை, அவற்றைக் கொண்டு வருவோருக்குத் திரும்பத் தரப்படமாட்டாது. மாறாக, இப்படி எல்லா பக்தர்களும் கொண்டு வரும் அனைத்துப் பொருள்களும் வழிபாட்டுக்குப்
பிறகு, பிரசாதமாக அனைவருக்கும் சரிசமமாகத் தரப்படும். ‘காணிக்கை வேண்டா(து)ங்கோ…’
என்று அய்யா வைகுண்டரே சொல்லியிருப்ப தால், தருமபதிகளில் உண்டியல்கள் கிடையாது. இங்கே பிரதானமாக வலியுறுத்தப்படுவது… ‘உங்களால் முடிந்த தருமத்தைச் செய்யுங்கள்’ என்பதுதான்.
‘தருமம் செய்து தழைத்திருங்கோ…’ என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு என்பதால், இங்கே வரும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தருமத்தைச் செய்கிறார்கள். அதாவது, தருமபதிகளில் நடைபெறும் அன்னதானத்துக்குத் தேவையான, தங்களால் முடிந்த நிதி உதவியை மனமுவந்து தரும் பக்தர்கள் இங்கு நிறையப் பேர்.
அய்யா வைகுண்டரைத் தேடி வந்து வழிபட்டால், நாம் நினைத்ததைச் சத்தியமாய் நிறைவேற்றித் தருவார் என்கிறார்கள் பக்தர்கள். நாமும் சாமித்தோப்பு சென்று அய்யா வைகுண்டரின் திருப்பாதம் பணிந்து வணங்கி, அவர் அருள்பெற்று வருவோம்!
படங்கள் : ரா.ராம்குமார்
இதுதான் அய்யா வழி!
அய்யா வைகுண்டரின் வழியைப் பின்பற்றும் மக்கள் ‘அய்யாவழி மக்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் அய்யா வைகுண்டர் தருமபதியை, சாமித்தோப்பில் இருந்து பிடிமண் எடுத்து வந்து உருவாக்கி வழிபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இவர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள்.
அய்யாவழி மக்களின் ஞான நூலாகக் கருதப்படுவது ‘அகிலத்திரட்டு அம்மானை’. இதை எழுதியவர் அய்யா வைகுண்டரின் சீடர்களுள் ஒருவரான அரிகோபாலன். எப்படி மகாபாரதத்தை வியாசர் சொல்லச்சொல்ல விநாயகப்பெருமான் எழுதினாரோ, அதுபோன்று அய்யா வைகுண்டர் சொல்லச்சொல்ல, அவரின் அருளால் – எழுதப் படிக்கத் தெரியாத அரிகோபாலன் எழுதியதுதான் இந்த தெய்வீக நூல்.
அய்யாவழித் திருமணங்களில் வேத விற்பன்னர்களுக்கு இடமில்லை. அவர்களது சமூகப் பெரியவர் ஒருவரே குருவாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
எந்தவொரு செயலைச் செய்தாலும், ‘அய்யா உண்டு’ என்று சொல்லும் வழக்கம் இவர்களிடம் உண்டு.
‘அய்யா… நாங்கள் அறிந்தோ அறியாமலோ செய்ததெல்லாம் அய்யா பொறுக்கணும்…’ என்று ஐந்து முறை, குனிந்தபடி நின்று சொல்லி அய்யா வைகுண்டரை வழிபடும் அய்யாவழி மக்களின் பழக்க வழக்கங்கள் நமக்கு விநோதமாகத் தெரிந்தாலும், அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பது மட்டும் உண்மை!
 மனிதம் மகிழ… புனிதப் பொங்கல் வைப்போம்!
பொங்கல் ஒரு விழாவாக, சடங்காக, ஆயிரம் ஆண்டுக் கலாசாரமாக நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்ல, பாரதம் முழுக்க பொங்கல் சார்புடைய நாள் புனிதமாகக் கொண்டாடப்படுகிறது. மனித நலனுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் சூரியன், கோடு தாண்டித் தென்புல மக்களை எட்டிப்பார்க்கும் நாள் என்பதால், அவர்கள் பொங்கலுக்கு அதிகப்படியான ஆர்வம் காட்டுகிறார்கள்.
அய்யா வைகுண்டரும் பொங்கல் பொங்கிட மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார். ஒருநாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளுமே சமத்துவப் பொங்கல் பொங்கிடச் செய்தார் அவர். எல்லா மக்களும் ஒரு கிணற்றில் குளித்து, அதே கிணற்று நீரை உண்ணப் பணித்தார். அதுவே, சாமித்தோப்பின் புனித தீர்த்தமாக போற்றப்படும் சமத்துவக் கிணறான முத்திரிக் கிணறு!
ஒருவன் பொங்கியதை இன்னொருவன் உண்பது இல்லை என்று அனாசாரங்கள் அரங்கேறி இருந்த காலத்தில், சமத்துவப் பொங்கல் பொங்கச் செய்தவர் அய்யா வைகுண்டர். ஒரு பானையில் பொங்கி, பல சாதி மக்களும் சமமாக அமர்ந்து உண்பதை உண்மையான சமத்துவப் பொங்கலாக அய்யா வைகுண்டர் கருதவில்லை. அனைத்து மக்களும் அவரவர் இல்லத்தில் இருந்து தனித்தனியாக அரிசி பதார்த்தங்களைக் கொண்டுவந்து ஒன்று சேர்த்துச் சமைத்து, எல்லோரும் ஒன்றாகக் கூடி, அதனை அனைவரும் சமமாகப் பகிர்ந்து உண்கிற சமத்துவப் பொங்கலை அய்யா வைகுண்டர் அமைத்துக் கொடுத்தார். இது சமத்துவப் பொங்கல் மட்டுமல்ல; மனிதநேயப் பொங்கல்!
பொங்கல், ஆண்டவனுக்கு அர்ப்பணிக்க மனிதனால் உருவாக்கப்படும் புனிதமான அமுது. புத்தம் புதுப் பானையில் புத்தரிசி இட்டு, நீர்வார்த்து, பனை ஓலைகொண்டு தீ மூட்டிப் பொங்கல் பொங்கும்போது, நெருப்பால் வெளியான குப்பைக் கூளங்கள் பொங்கல் பானையினுள் வேகும் பொங்கலில் மிதந்து கலந்து இருக்கும். பொங்கல் பொங்கி வழியும்போது, அந்த அனைத்துக் கசடுகளும், தும்புத் தூசு கரித் துகள்களும் பொங்கி வழிந்து போய்விடும். கலப்படமற்ற தூய வெண் பொங்கல் தயாராகிவிடும்.
அந்தத் தூய்மையான பொங்கல் போன்ற அன்பை நம் செயல்களில் கலந்து, இறையருளை நிறைத்து, நம்மைப் புனிதப்படுத்துவோம். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களும், தனி மனித அவலங்களும் நீங்கி, நல்ல மாற்றங்கள் நிகழட்டும்.
‘நீதி விளங்கி மனு வாழ்க,
எல்லோரும் வாழ்க,
நவில்வோரும்தான் வாழ்க,
பூலோகம் உள்ளளவும்
பொய் அருகி மெய் வாழ்க!
எல்லோருக்கும்
ஆசீர்வாதங்கள்!
- மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக