போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:-
“அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி
வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும்
சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால்
எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும்
அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல்
தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட
செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய
வேண்டியதைச் செய்கிறோம். அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச்
செய். இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ஈசுவர
பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை
விடுவித்துக் கொள்ள முடியாது.” சஞ்ஜயன் சொல்லுகிறான்:
பலவான் ஆவது குறிக்கோள் 2-3 -பெரியோரோடு போர் புரியேன் என்கிறான்
அர்ஜுனன் 4-6 -அருள் பெறுவதற்கு ஏற்ற மன நிலை 7-8 -அருள் சுரப்பதன் அறிகுறி
10-யோகத்துக்கு அஸ்திவாரம் 11-ஆத்மாவுக்கு அழிவில்லை 12- மரணத்தின் கூறு
13-குளிரும் வெப்பமும் உடலுக்கு உண்டு 14-15 -ஸத் எது? அஸத் எது? 16-20
-வினையில் பற்று அற்று இரு 21 -மறு பிறப்பு 22- ஆத்மா நிஷ்பிரபஞ்சப் பொருள்
23-25- ஆத்மா அழிகிறது என்றாலும் வருந்துவது பொருந்தாது 26-28- ஆத்மா மனம்
மொழிக்கு எட்டாதது 29-30 -கடமையினின்று வழுவலாகாது 31-37 -கர்மத்தைக்
கர்மயோகமாக்கு 38-41 -உலகத்தவர் போக்கு 42-44- யோகத்துக்குத் திறவுகோல்
45-53 -நிறைஞானியின் லக்ஷணம் 54-72.
ஸஞ்ஜய உவாச
1. தம் ததா க்ரிபயாவிஷ்டமஸ்ருபூர்ணாகுலேக்ஷணம்
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான் ததா க்ரிபயா ஆவிஷ்டம்-அவ்வண்ணம்
இரக்கம் மிஞ்சியவனாய் அஸ்ருபூர்ண ஆகுல ஈக்ஷணம்- நீர் நிரம்பிய விழிகளுடன்
விஷீதந்தம்-சோகத்தோடு கூடிய தம்-அவனை (அர்ஜுனனை) மதுஸூதந: இதம் வாக்யம் உவாச- மதுசூதனன் இந்த வாக்கியத்தை சொல்லுகிறான்
பொருள் : அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்:
தன் மனதை முற்றிலும் தன் வசத்தில் வைத்திருக்கும் ஒருவன் பிறர்படும்
துக்கத்தைப் போக்க முயலுவது கிருபையாகும். இங்கு அர்ஜுனனிடத்துக்
கிருபைபோன்று தென்படுவது உண்மையில் கிருபையன்று. உணர்ச்சியானது அவனது
உடைமையாயிருப்பதுபோய், அவன் உணர்ச்சிக்கும் மனத்தளர்ச்சிக்கும்
அடிமையாகிவிட்டான்.
ஸ்ரீ பகவாநுவாச
2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந
ஸ்ரீ பகவான் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் அர்ஜுந!-அர்ஜுனா விஷமே-தகாத
சமயத்தில் குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து உன்னை இந்த
உள்ளச் சோர்வு அடைந்தது அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு தகாதது
அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது அகீர்திகரம்-புகழையும் தராதது
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை
நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது;
அபகீர்த்தி தருவது அர்ஜுனா!
இதுவரையில் பேசாதிருந்த பகவான் இப்பொழுதுதான் திருவாய்
மலர்ந்தருளுகிறார். ஆக, ஸ்ரீமத் பகவத்கீதையின் துவக்கம் இதுவே. எடுத்த
எடுப்பில் இரண்டு சுலோகங்களில் இந்த சாஸ்திரத்தின் மூல தத்துவம்
வெளியாகிறது. பகவானது போதனையின் சாரம் இவ்விரண்டு சுலோகங்களில் அடங்கப்
பெற்றுள்ளது. இதுபோன்ற சிறப்பை மேலாம் நூல்கள் அனைத்திடத்தும் காணலாம்.
அதாவது ஆய்ந்த அடிப்படைக் கருத்தானது துவக்கத்திலேயே தெளிவுபட வந்தமைகிறது.
3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே
க்ஷúத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப
க்லைப்யம் மா ஸ்ம கம:-அலியின் தன்மையை அடையாதே ஏதத் ந உபபத்யதே-இது
பொருத்தமன்று க்ஷúத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வா-இழிந்த மனத்தளர்ச்சியை
விடுத்து உத்திஷ்ட பரந்தப-எழுந்து நில், பகைவரைச் சுடுவோனே.
பொருள் : பார்த்தா பேடித்தன்மையடையாதே! இது நினக்குப் பொருந்தாது. இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!
ஆண்மையை இழந்து பேதைபோன்று நடந்துகொள்பவன் அலி ஆகின்றான். அர்ஜுனன்
பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் அத்தகையவைகளல்ல. அவன் உண்மையில் எதிரிகளைப்
பறந்தோடச் செய்பவன். மகாதேவனோடு போர் புரிந்த அர்ஜுனனுக்கும்
மனத்தளர்ச்சிக்கும் வெகு தூரம். தற்காலிகமாக வந்துள்ள தளர்ச்சியை இழித்துப்
பேச அதை அடியோடு அப்புறப்படுத்தும்படி பகவான் தூண்டுகிறார்.
அர்ஜுந உவாச
4. கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான் அஹம் ஸங்க்யே-நான் போரில் கதம்
இஷுபி:-எவ்வாறு அம்புகளால் பூஜார்ஹௌ பீஷ்மம் த்ரோணம் ச-தொழுதற்குரிய
பீஷ்மர், துரோணர் ஆகியோரை ப்ரதியோத்ஸ்யாமி-எதிர்ப்பேன் அரிஸூதந-பகைவர்களை
அழிப்பவனே
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, பீஷ்மனையும் துரோணரையும்
போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரை
யழிப்போய்!
கிருஷ்ணா, உமக்கு அரிசூதனன் என்றும் மதுசூதனன் என்றும் பெயர் வந்துள்ளது
பொருந்தும்; ஏனென்றால் பகைவனைக் கொல்லுவதும் அரக்கனை அழிப்பதும் முறை.
மற்று, பீஷ்மரையும் துரோணரையும் நான் எதிர்த்து விவாதம் செய்வதே தகாது.
அத்தகையவர்களைப் போரில் எதிர்த்து வில்லெடுத்து அடிக்க எனக்குத் துணிவு
எப்படி உண்டாகும்? பாட்டனாரோடு போர் புரிந்தவன் என்றும், ஆசாரியரை
எதிர்த்தவன் என்றும் எனக்கு அவதூறு வந்துவிடுமல்லவா?
5. குரூநஹத்வா ஹி மஹாநுபாவாஞ்
ச்யுரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே
ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ
புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்
மஹாநுபாவாந் குரூந் அஹத்வா- பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல் இஹ
லோகே-இவ்வுலகத்தில் பைக்ஷ்யம் அபி-பிச்சையெடுத்து போக்தும் ஸ்ரேய:-உண்பதும்
நன்றுஹி-ஏனெனில் அர்தகாமாந் குரூந் ஹத்வா-பொருளை விரும்பும் குருக்களைக்
கொன்று இஹ-உலகில் புஞ்ஜீய-துய்க்கும் போகாந் ருதிரப்ரதிக்தாந் ஏவ-இன்பங்கள்
உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்
பொருள் : பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில்
பிச்சையெடுத்துண்பதும் நன்று. பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம்
துய்க்கும் இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்.
பீஷ்மர் நைஷ்டிக பிரம்மசாரியாவார். இச்சாமிருத்யு அல்லது
விரும்பியபொழுது மரணத்தை அடையும் வல்லமையுடையவர். அவர் தன்னலம் கருதாத தபோ
நிஷ்டையுடையவர். இனி துரோணரோ சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர்; ஆசார
சீலமுடையவர். கிருபரும் அத்தகையவரே. ஆகையால் இவர்கள் எல்லாரும்
மஹானுபாவர்களாகிறார்கள். இவர்களைக் கொல்லுவதால் இவ்வுலக வாழ்க்கையே நரக
வாழ்க்கையாக மாறிவிடும். குருக்கள் என்னும் சொல் வயதிலும் அறிவிலும்
மூத்தவர்கள் எனப் பொருள்படுகிறது.
6. ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ
யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்
தேவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:
ந:-நமக்கு கதரத் கரீயோ-இவற்றுள் எது மேன்மை யத்வா ஜயேம-இவர்களை
வெல்லுதல் யதி வா நோ ஜயேயு:-இவர்கள் நம்மை வெல்லுதல் ந
வித்ம:-விளங்கவில்லையாந் ஹத்வா ந ஜிஜீவிஷாம -எவரைக் கொன்றபின் நாம் வாழ
விரும்ப மாட்டோமோ தே தார்தராஷ்ட்ரா: ஏவ-அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார்
ப்ரமுகே அவஸ்திதா:-முன்னே நிற்கிறார்கள்
பொருள் : மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல்
-இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம்
உயிர்கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர்
முனையில் வந்து நிற்கிறார்கள்.
7. கார்பண்யதோ÷ஷாபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:
யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்
கார்பண்யதோஷ உபஹத ஸ்வபாவ:-கோழைத் தனத்தால் சீரழிந்த சுபாவம்
தர்மஸம்மூடசேதா:-அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன் த்வாம்
ப்ருச்சாமி-உன்னைக் கேட்கிறேன் யத் ஸ்ரேய: ஸ்யாத்-எது நல்லது தத் மே
நிஸ்சிதம் ப்ரூஹி-அதை நிச்சயப் படுத்தி சொல்லுகஅஹம் தே ஸிஷ்ய-நான் உங்கள்
சீடன்
த்வாம் ப்ரபந்நம் மாம் ஸாதி-உன்னை சரணடைந்த எனக்கு கட்டளை இடுக
பொருள் : சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது
என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை
எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப்
புகுந்தேன். கட்டளை தருக.
மனதின்கண் அமைந்துள்ள ஏழ்மையானது கார்ப்பண்யம் எனப்படுகிறது. பிறர்
பார்த்து இரங்கி வருந்துதற்கேற்ற நிலையும் கார்ப்பண்யமாம். ஒரு
நெருக்கடியில் மனதினுள் வருவித்துக்கொண்ட தளர்வும் துயரமும் அதன்கண் உண்டு.
யார் ஒருவனிடத்துக் கார்ப்பண்யம் இருக்கிறதோ அவன் கிருபணன். தன்னிடத்துள்ள
செல்வத்தைச் சிறிதும் செலவு செய்ய மனம் துணியாதவனுக்கும் அப்பெயர்
வந்தமைகிறது. உலகில் பிறந்துள்ள மானுடன் ஒருவன் பரம்பொருளைப்பற்றிய ஞானத்தை
அடையாது போவானாகில் அவன் கிருபணன் ஆகின்றான் என்று உபநிஷதம் கூறுகிறது.
தன்னைக் கிருபணன் என்று ஈண்டு அர்ஜுனன் பகவானிடம் பகர்வது முற்றிலும்
பொருத்தமானதே.
மனிதனால் தேடப் படுபவைகளில் பிரேயஸ், சிரேயஸ் என்று இரண்டு இயல்புகள் இருக்கின்றன.
8. ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷணமிந்த்யூரியாணாம்
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்
ஹி-ஏனெனில் பூமௌ-பூமியில் அஸபத்நம்-எதிரிகளற்றருத்தம்-செழிப்பான
ஸுராணாம் ச அதிபத்யம் ராஜ்யம்-வானோர்மிசை ஆட்சி அவாப்ய அபி-அடைந்தாலும்
யத் மம இந்த்ரியாணாம்-என்னுடைய புலன்களை உச்சோஷணம் சோகம்-வாட வைக்கின்ற சோகம் அபநுத்யாத்-போக்கடிக்கும் ந ப்ரபஸ்யாமி-காணவில்லை
பொருள் : பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி
வானோர்மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை
விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.
தனக்கு ஏற்பட்ட துயரத்தைப் பார்த்தன் முதலில் கொஞ்சம் மறைத்துவைத்துப்
பேசுகிறான். இம்மையிலும் மறுமையிலும் உயிர்களுக்குத் தீங்குவரும் என்று
முதல் அத்தியாயத்தில் சொன்னதெல்லாம் மேற்பூச்சு. உனக்கு இத்தகைய சோர்வு
ஏற்படுவதற்குக் காரணம் யாது? என்று பகவான் பரிந்து கேட்டவுடன், உண்மை
உள்ளபடி வெளியாகிறது. மற்றவர்களிடத்துத் தனது மனத்துயரத்தை மறைத்துவைக்கும்
இளம் மாது ஒருத்தி பெற்ற தாயினிடம் தயங்காது யாவையும் வெளியிடுவாள்.
அன்பும் அனுதாபமும் உள்ள இடத்தில் மனதை உள்ளபடி சமர்ப்பிப்பது மிக
எளிதாகிறது. தாயினும் சாலப் பரிந்து கேட்பவர் ஒருவரிடம் அங்ஙனம்
வாய்விட்டுப் பகர்வதால் துயரம் என்னும் மனச்சுமை குறைகிறது. ஸ்ரீ
கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் உள்ள இணக்கம் மிக நெருங்கியது.
தாயின் இனிமையும், தந்தையின் பராமரிப்பும், குருவின் கட்டுப்பாடும், அரசனது
நேர்மையும், கடவுளது கிருபையும் ஒன்று கூடியது கிருஷ்ணனுடைய இவ்விணக்கம்.
ஆகையால் தங்கு தடையின்றி அர்ஜுனன் தன் மனக்கிலேசத்தை விரித்து
விளக்குகிறான்.
ஸஞ்ஜய உவாச
9. ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ: பரந்தப:
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ
ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான் பரந்தப:-எதிரிகளை எரிப்பவனே! குடாகேஸ:
ஹ்ருஷீகேஸம் ஏவம் உக்த்வா-உறக்கத்தை வென்றவன் அர்ஜுனன்), ஸ்ரீ கிருஷ்ணனிடம்
இவ்விதம் சொல்லி ந யோத்ஸ்யே இதி ஹ கோவிந்தம் உக்த்வா-இனி போர் புரியேன்
என்று கோவிந்தனிடம் சொல்லி தூஷ்ணீம் பபூவ-மௌனம் ஆனான்.
பொருள் : சஞ்ஜயன் சொல்லுகிறான்: பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு
பசுநிரை காக்கும் பகவனை நோக்கிப் போரினிப் புரியேன் என்று
வாய்புதைத்திருந்தான்.
இங்கு ஸஞ்ஜயர் கையாளுகிற பதங்களில் பரந்த கருத்துக்கள் அடங்கப்
பெற்றிருக்கின்றன. யுத்தமும் நடைபெறலாகாது, ராஜ்யமும் தன் பிள்ளைகளுக்கே
இருக்கவேண்டும் என்பது திருதராஷ்டிர மன்னனது மனோரதம். அது நிறைவேறாது என்று
குறிப்பிடப்படுகிறது. தன்னளவில் அர்ஜுனன் குடாகேசன் என்ற பட்டம் பெற்றவன்.
அதாவது அவன் தூக்கத்தை அறவே வென்றவன். விரும்பிய வேளையில் விரும்பிய
அளவுக்குத்தான் அவனுக்கு உறக்கம் வரும். தன் உடலையும் உள்ளத்தையும் நன்கு
கட்டி ஆளுபவனுக்கே இது இயலும். (நெப்போலியன், சிவாஜி முதலியவர்களும்
அர்ஜுனனைப் போன்று குடாகேசர்களாக இருந்தார்கள்) அர்ஜுனன் தன்னையே கட்டி
ஆண்டதுபோன்று எதிரிகளை விரட்டியோட்டவும், வென்று வசப்படுத்தவும்
வல்லவனாயிருந்தான்.
அத்தகையவனுக்கு ஸாரதியாக வந்தமைந்தவர் ஹிருஷீ கேசர். அதாவது
இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனாயிருப்பவர். ஸ்ரீகிருஷ்ணனிடம் அத்தகைய மகிமை
யிருந்தமையால் அவர் அங்ஙனம் அழைக்கப்பட்டார். மேலும் அவர் கோவிந்தன்.
(கோ=உயிர்கள்; விந்தன் -அறிபவன்) ஆக, அர்ஜுனனுக்கு ஏற்பட்ட தளர்வு
தற்காலிகமானது. தானே அதைத் துடைக்க வல்லவன். துணைபுரிபவனோ உலகில் ஒப்பிலான்
ஆகிய கிருஷ்ண பரமாத்மா. ஆக, திருதராஷ்டிரனது எண்ணம் நிறைவேறாது என்று
ஸஞ்ஜயர் குறிப்பிடுகிறார்.
10. தமுவாச ஹ்ருஷீகேஸ: ப்ரஹஸந்நிவ பாரத
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:
பாரத-பாரதா உபயோ: ஸேநயோ: மத்யே-இரண்டு படைகளுக்கும் நடுவே விஷீதந்தம்-
துயருற்று இருக்கும் தம்-அவனிடம் (அர்ஜுனன்) ப்ரஹஸன் இவ- புன்னகை பூத்து
இதம் வச: உவாச-இவ்வசனம் கூறினான்.
பொருள் : பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசனமுரைக்கிறான்:
பரத வம்சத்துதித்தவரே என்று திருதராஷ்டிரன் அழைக்கப்படுகிறார். பரதனுடைய
ஆட்சியில் இருந்தமையால் இந்தியாவுக்கு பாரதவர்ஷம் என்ற பெயர் வந்தது.
பகவான் புன்னகை பூத்ததில் பரந்த கருத்து அடங்கப்பெற்றிருக்கிறது.
உலகெங்கும் இரவில் இருள் சூழ்ந்து செயலற்றுக் கிடக்கிறது. பின்பு,
புன்முறுவல் பூத்தாற்போன்று கீழ்வானம் வெள்ளென வெளுக்கிறது. இனி
சூரியோதயமாகி உயிர்களை எழுப்பிச் செயலில் ஈடுபடுத்தப் போகிறது என்பதற்கு
அது முன் அறிகுறி. அங்ஙனம் பகவானது இளநகை இனிவருகின்ற யோகத்துக்கும்
ஞானத்துக்கும் முன் அறிகுறி. அர்ஜுனன் அவரிடமிருந்து இதுபரியந்தம் பெற்றது
பிரேயஸ் - பிரியத்தைத் தருவதாகிய இகலோகப் பிராப்தி. இனிப் பெறப்போவது
சிரேயஸ். அது இருமையிலும் ஸர்வதுக்க நிவர்த்தி செய்வது. பாரமார்த்திகப்
பெருநிலம் அளிப்பதும் அதுவே. அதைப் பெற்ற பின் அதற்குமேல் பெறவேண்டியது
ஒன்றுமில்லை. அதற்கேற்ற தருணம் அர்ஜுனனுக்கு இப்பொழுது வந்துவிட, இளநகையின்
மூலம் இறைவன் அதைப் பாராட்டி, அருள்புரிய ஆரம்பிக்கிறார்.
11. அஸோச்யாநந் வஸோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே
கதாஸூநகதாஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா:
ஸ்ரீ பகவான் சொல்கிறான்
த்வம்-நீ அஸோச்யாந்-துயர் படத் தகாதார் அந்வஸோச:-வருந்துகிறாய்
ப்ரஜ்ஞாவாதாந்-பண்டிதர்களைப் போன்று பாஷஸே-பேசுகிறாய் கதாஸூந்-இறந்தார்க்
கேனும் அகதாஸூந்-இருந்தார்க் கேனும் பண்டிதா: ந அநுஸோசந்தி-பண்டிதர்கள்
வருந்துவது இல்லை
பொருள் : துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான
வுரைகளு முரைக்கின்றாய்! இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர்
கொளார் அறிஞர்.
முதல் அத்தியாயம் முப்பத்தைந்தாவது சுலோகத்திலிருந்து நாற்பத்து
நான்காவது சுலோகம் வரையில் அர்ஜுனன் பகர்ந்ததை பிரக்ஞாவாதம் (ஞானியரது
நல்லுரை) என்று பகவான் பரிகசிக்கிறார்.
புஸ்தங்கள் பல படித்திருப்பவனைப் பண்டிதன் என்று சொல்லுவது வழக்கம்.
ஆனால் பண்டிதனுக்கு பகவான் தரும் லக்ஷணம் வேறு. இயற்கையின் நடைமுறையை
உள்ளபடி அறிந்திருப்பவன் பண்டிதன் ஆவான். சூரியன் தோன்றுவதையும் மறைவதையும்
குறித்து யாரும் வருந்தாதிருப்பது போன்று ஜனன மரண தத்துவத்தை அறியும்
ஆத்மஞானி சாவுக்கு வருந்துவதில்லை. வருத்தப்படுதலில் அவனுக்கு
அர்த்தமில்லை. எதைக் குறித்தும் மனம் தளராமை பண்டிதனுடைய போக்கு. அர்ஜுனனோ
தனது ஞானமொழியோடு பொருந்தாத மனத்தளர்ச்சி கொள்கிறான்.
12. நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்
ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன், ந த்வம்
இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே, அத:
பரம்-இனி மேலும், வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும்
மாட்டோம்
பொருள் : இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும்
இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும்
மாட்டோம்.
தேகங்களத்தனையும் தோன்றியவாறு அழியும். எது ஓயாது
தகனமாய்க்கொண்டிருக்கிறதோ அது தேகம். தேகங்களுள் குடியிருக்கும் ஆத்மா
அழிவற்றது; முக்காலத்திலும் அது பொதுவாயுள்ளது. ஒரு காலத்தில் இருந்து
இன்னொரு காலத்தில் இல்லாமற் போய்விடுவது அதற்கில்லை. எப்படி அது காலத்தில்
அடிபடுவதில்லை என்று வினவின், அதற்கு விடை வருகிறது:
13. தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி
யதா தேஹிந:-எப்படி ஆத்மாவுக்கு, அஸ்மிந் தேஹே-இந்த உடலில்
கௌமாரம்
யௌவநம் ஜரா-பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் ததா
தேஹாந்தரப்ராப்தி-அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது தீர தத்ர ந
முஹ்யதி-தீரன் அதில் கலங்கமாட்டான்.
பொருள் : ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும்,
மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது.
தீரன் அதில் கலங்கமாட்டான்.
ஒருவன் குழந்தையாய்க் காளையாகிப் பிறகு கிழவனாகிறான் இந்த
மாறுதல்களெல்லாம் ஒரே மனிதனிடத்து உண்டாகின்றன. குழந்தையாக இருந்தவன்
ஒருவன், காளையானவன் மற்றொருவன் என்று சொல்லுதல் பொருந்தாது. அங்ஙனமே ஓர்
உடலைவிட்டு இன்னோர் உடலுக்குப் போகிறவனும் அதே ஆள். ஞானிக்கு இவ்வுண்மை
சுவானுபவமாக விளங்குவதால் அவன் மனக்கலக்க மடைவதில்லை. பின்பு
மனங்கலங்காதிருந்து பழகுபவன் தீரன் அல்லது ஞானி ஆவதற்குத் தன்னை
ஆயத்தப்படுத்துகிறான். மாறுபாடு யாவும் உடலினுடையது என்றும், மாறாத்தன்மை
ஆத்மாவினுடையதென்றும் அறிபவன் தீரன். ஆத்மா நித்தியப்பொருள் எனினும்
அதற்குக் குளிர் வெப்பம், இன்ப துன்பம் முதலியன இருப்பது இயல்புதானே என்ற
எண்ணம் வரலாம். அதைப் பற்றிய உண்மை வருமாறு:
14. மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஸீ÷க்ஷதாஷ்ணஸுகது:கதா:
ஆகமாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத
கௌந்தேய-குந்தியின் மகனே, ஸீதோஷ்ண ஸுகது:கதா:-குளிரையும் வெப்பத்தையும்,
இன்பத்தையும் துன்பத்தையும், மாத்ராஸ்பர்ஸா: து-இயற்கையின் தீண்டுதல்கள்,
ஆகமாபாயிந:-உண்டாகி அழிபவை அநித்யா:-அநித்யமானவை பாரத - தாந்
ஸ்திதிக்ஷஸ்வ-பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.
பொருள் : குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும்
துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன.
என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.
கண், செவி முதலிய ஐம்பொறிகள் அதனதன் புலனாகிய வடிவம், ஒலி முதலியவைகளில்
உலவுகின்றன. அதனால் உலகம் வேண்டப்படுபவை, வேண்டப்படாதவைகளாகப் புலனாகி
இன்ப துன்பங்களை விளைவிக்கின்றன. இந்திரியங்களுக்கு விஷயமாகும் பொழுது
தோன்றவும், விஷயமாகாதபொழுது அவைகள் மறையவும் செய்கின்றன. ஒருவேளையில்
இன்பம் தருகிற அதே பொருள் மற்றொரு வேளையில் துன்பம் தருகிறது. குளிர்
அல்லது வெப்பம் இதற்குச் சான்று. இன்பம் தரும் உணவு நோய்வாய்ப்
பட்டிருக்கும்போது துன்பம் தருகிறது. ஆகையால் அவையாவும் அநித்தியமானவைகள்.
அவைகளைப் பொறுத்துப் பழகுபவன் உறுதியைப் பெறுகிறான். திதிøக்ஷ அல்லது
பொறையைப் பழகுதல் நல்வாழ்க்கைக்கு ஓர் இன்றியமையாத சாதனமாகிறது. அத்தகையவன்
இன்ப துன்பங்களுக்கு ஆளாவதில்லை; ஞானத்துக்குத் தகுதியுடையவன் ஆகிறான்.
தகுதி அவனுக்கு எப்படி வந்து அமைகிறது என்று கேட்கின், அதற்கு விடை
வருகிறது:
15. யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப
ஸமது:கஸுகம் தீரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே
ஹி-ஏனெனில், புருஷர்ஷப-புருஷர்களில் சிறந்தவனே,
ஸமது:கஸுகம்-இன்பமுந்துன்பமும் நிகரென, யம் தீரம் புருஷம்-எந்த தீர
புருஷன், ந வ்யதயந்தி-கலங்க வைப்பதில்லையோ,
ஸ: அம்ருதத்வாய கல்பதே-அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான்.
பொருள் : யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான், அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான்.
உடல் என்னும் புரியிலே வாசம் பண்ணுபவன் புருஷன் எனப்படுகிறான்.
பொருள்களைப் புலன்கள் வாயிலாகச் சேர்வதால் உடலின்கண் இன்பதுன்பங்கள்
தப்பாமல் வந்தமையும். அவ்வுடலைத் தான் என்று எண்ணுபவன் துன்புறுவது
திண்ணம். ஆத்ம சொரூபத்திலேயே நிலைத்திருப்பவனது மனம் அசைவதில்லை. அமைதியே
வடிவெடுத்தவனாக அவன் இருக்கிறான். நிலையற்ற நிகழ்ச்சிகளால்
சஞ்சலப்படாதிருப்பது அவனது உள்ளத் தெளிவைக் காட்டுகிறது. ஆதலால் அவன் தீரன்
அல்லது பேரறிவுடையவன் ஆகிறான். சாகாநிலையாகிய மோக்ஷத்துக்கு அவனே
தகுதியுடையவன்.
இவ்வுலக நிகழ்ச்சிகளை முறையாகப் பயன்படுத்தி நம்மைத் தீரர்களாக்குதற்கு
நாம் இவ்வுலகில் வந்துள்ளோம். அக்ஞானம் அகலுகின்றவளவு துக்க நிவர்த்தியும்
வந்தமைகிறது. உள்ளது எது என்ற ஆராய்ச்சி அடுத்த படியாக வருகிறது:
16. நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி:
அஸத: பாவ ந வித்யதே-இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை, ஸத: அபாவ ந
வித்யதே-உள்ளதற்கு இல்லாதது என்பது இல்லை, அநயோ உபயோ அபி அந்த:-இந்த
இரண்டுக்குமுள்ள தத்துவம் தத்த்வதர்ஸிபி: த்ருஷ்டா-தத்துவ தரிசிகள்
உணர்வார்.
பொருள் : இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.
தத்துவ தர்சனம் என்பது உண்மையைக் காணுதல். உண்மையைக் காண்பதற்கே
உயிர்கள் முயன்று வருகின்றன. தேடிய பொருளைக் கண்டெடுத்தவர்க்கு மேலும்
தேடித்திரிய வேண்டிய அவசியமில்லை. உள்ளது எது என்று தேடுவது உயிர்களின்
இயல்பு. இருப்பதை உரியதாக்கிக்கொள்ளச் செய்யும் முயற்சியே வாழ்க்கை என்று
அழைக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் நதியின் நீர் ஒடுங்கியிருக்கும்போது
நெடுந்தூரத்துக்கு நனைந்த பூமி அதில் கண்ணுக்குத் தென்படுகிறது. ஆயினும்
அதைச் சாகுபடிக்கு உரியதாக்கிக்கொள்ள யாரும் முயலுவதில்லை. ஏனென்றால்
மாரிக்காலத்தில் மீண்டும் பெருக்கெடுத்து ஓடும் பிரவாகத்துக்கு அது
உட்படும். நாளைக்குப் பயன்படாது போகுமாதலால் இன்றே அது பயனற்றதென்று
கருதப்படுகிறது. தத்துவதர்சிகள் தேகத்தையும் அதினின்று தோன்றும் சுக
துக்கங்களையும் அங்ஙனம் கருதுகின்றனர். முன்பு ஒரு காலத்தில் நம் தேகம்
இல்லை. இடையில் அது வந்துள்ளது. பின்பு அது இல்லாமற்போம். ஆகையால் இடையில்
இருக்கும்பொழுதும் உண்மையில் அது இல்லாததே-அபாவமே. கனவில் வந்துள்ள செல்வம்
வந்திருக்கும்பொழுதும் உண்மையில் இல்லை.
தேகம் அஸத்து, அதாவது இல்லாதது. ஏனென்றால் அதனிடத்து பாவமில்லை;
இருக்கின்றேன் என்ற உணர்ச்சியில்லை. முன்பு இல்லாதது இடையில் வந்து,
இறுதியில் மறைவது விகாரப்படும் தன்மையது. ஆதலால் அது இருக்கும்பொழுதும்
இல்லாததெனத் தள்ளத் தகுந்தது. அதனிடத்திருந்து வரும் சுகதுக்கங்களையும்
அப்படியே புறக்கணிக்க வேண்டியது பெரியோர் கடமை. ஆத்மாவோ ஸத்து, அதாவது
உள்ளது. ஏனென்றால் அதனிடத்து உணர்வு உண்டு. இருக்கிறேன் என்ற உணர்ச்சி
அல்லது பிரக்ஞை வடிவமானது அது. பிரக்ஞையானது காலத்தால், தேசத்தால் அல்லது
அவஸ்தையால் அடிபடாதது. ஒரு விகாரத்தையும் அது எடுப்பதில்லை. மாறுபாடு
என்பது ஆத்மாவுக்கு இல்லை. அது நித்தியமாய் உள்ளது. மேலும் அதன் சொரூபம்
வருமாறு:
17. அவிநாஸி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்
விநாஸமவ்யயஸ்யாஸ்ய ந கஸ்சித்கர்துமர்ஹதி
அவிநாஸி து-அழிவற்றது தான் என்று, தத் வித்தி:-அதை அறிந்து கொள். யேந
இதம் ஸர்வம்-எதனால் இவை அனைத்தும், ததம்-வியாபிக்கப் பட்டிருக்கிறதோ அஸ்ய
அவ்யயஸ்ய-அந்த அழிவற்றதற்கு, விநாஸம் கர்தும் கஸ்சித் ந அர்ஹதி-அழிவை
ஏற்படுத்த யாருக்கும் இயலாது.
பொருள் : இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.
ஆகாசத்தில் அதாவது வெட்டவெளியில் திடீரென்று மேகங்கள் தோன்றுகின்றன.
நீக்கமற எங்கும் பரவியுள்ள வெட்ட வெளியைப் பிளவுபடுத்த அம்மேகங்களுக்கு
இயலாது. பெரியதாகப் பரிணமிப்பதும் சிறியதாக ஒடுங்குவதும் மேகத்துக்கு
உண்டு. ஆனால் ஆகாசத்துக்குக் கூடுதல் குறைதல் இல்லை. அங்ஙனம் சிதாகாசத்தில்
அதாவது அறிவு வெளியில் ஜகத் தோன்றவும், நிலைபெற்றிருக்கவும், மறையவும்
செய்கிறது. அதனால் சிதாகாசத்தில் ஒருவித மாறுதலும் உண்டாவதில்லை. அதைக்
கூட்டவோ, தேய்க்கவோ, மறைக்கவோ யாருக்கும் இயலாது. சாக்ஷியாக உள்ளது அது.
18. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண:
அநாஸிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத
அநாஸிந:-அழிவற்றான், அப்ரமேயஸ்ய-அளவிடத்தகாதான், நித்யஸ்ய-நித்தியன்,
ஸரீரிண: இமே தேஹா-ஆத்மாவினுடைய இந்த வடிவங்கள், அந்தவந்த உக்தா:-அழியக்
கூடியவையாக என்பர், தஸ்மாத் யுத்யஸ்வ பாரத-ஆதலால் பாரதா, போர் செய்.
பொருள் : ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.
கடல் இருந்தபடி இருக்க அதனுள் நீர் இடம் மாறி அமைகிறது; ஆறாக ஓடுகிறது;
பனிக்கட்டியாக உறைகிறது. ஆத்மாவில் அதுபோன்ற மாறுதல் இல்லை. ஆதலால் ஆத்மா
நித்தியம். குட்டையில் உள்ள நீர் ஆவியாகக் கிளம்பிக் குட்டைக்கு நாசம்
ஏற்படுகிறது. ஆத்மாவினிடத்து அத்தகைய நாசம் ஒன்றுமில்லை. மேலும் மனம்
மொழிக்கு எட்டாமையினால் அது அளப்பறியதாகிறது. கடலில் ஏற்படுகிற மாறுதல்
உடலிலும் உண்டாகிறது. குட்டைக்கு வருகிற நாசம் போன்று ஆக்கைக்கு மரணம்,
தகனம் ஆகியவைகள் வாயிலாக நாசம் வருகிறது. தேகத்தின் தன்மையை மனதைக்
கொண்டும், மற்றொரு தேகத்தைக்கொண்டும், அறிவைக் கொண்டும்
அளந்தெடுக்கமுடியும். ஆத்மாவை அப்படி மதிப்பிடமுடியாது.
பொருளைப்பற்றி வந்த மயக்கத்தால் அர்ஜுனன் போர்புரிய மாட்டேன் என்கிறான்.
மயக்கம் கொள்ளுதலும், போர் முனையினின்று பின்வாங்குதலும், அதாவது தன்
கடமையைச் செய்யாது ஒழிதலும் ஒருவிதத்திலும் பார்த்தனுக்குப் பொருந்தாது.
ஆதலால் பார்த்தா, போர்புரிக என்கிறார் பகவான். ஆதலால் போர்புரிக என்ற
பல்லவியை இன்னும் பல தடவை கேட்கிறார்கள்.
19. ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே
ய: ஏநம்-எவன் இந்த (ஆத்மாவை), ஹந்தாரம் வேத்தி-கொல்பவனாக நினைக்கிறானோ,
ய: ஏநம் ஹதம் மந்யதே-எவன் இந்த ஆத்மாவை கொல்லப் பட்டவனாக நினைக்கிறானோ,
தௌ உபௌ-அந்த இருவருமே, ந விஜாநீத:-அறியாதவர்கள், அயம் ந ஹந்தி-இவன் கொல்லுவதுமில்லை, ந ஹந்யதே-கொலையுண்டதுமில்லை.
பொருள் : இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று
நினைப்போனும் இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை,
கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை;
செல்வத்தில் பெரும் பற்றுடைய ஒருவனது செல்வம் திடீரென்று அழிந்துபோனால்,
நான் தொலைந்தேன் என்கிறான் அவன். செல்வம் தன் சொரூபமாகாது. தன்னுடைய ஒன்று
அழிய, மனிதன் தானே அழிந்து போவதாக நினைக்கிறான். தன்னுடையது என்பது
மமகாரம். தடித்த மமகாரம் அகங்காரம் போன்று ஆய்விடுகிறது. தேகத்தைத் தான்
என்று எண்ணுவது அகங்காரம். மாறுபடும் தன்மையது தேகம். மாறாப்பெருநிலையில்
வீற்றிருப்பது ஆத்ம சைதன்யம். தோன்றிய மேகம் மறையும்பொழுது ஆகாசம் எப்படி
அழிவதில்லையோ, அப்படி ஆக்கை அழியும்போது ஆத்மா அழிவதில்லை.
20. ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஸாஸ்வதோऽயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே
அயம் கதாசித்-இந்த ஆத்மா எப்போதும், ந ஜாயதே வா ம்ரியதே-பிறப்பதும்
இல்லை இறப்பதும் இல்லை, பூத்வா பூய: ந பவிதா-முன் உண்டாகி பிறகு ஏற்படக்
கூடியதும் இல்லை, அயம் அஜ: நித்ய: ஸாஸ்வத: புராண:-இவன் பிறப்பற்றான்;
அனவரதன்; சாசுவதன்; பழையோன், ஸரீரே ஹந்யமாநே ந ஹந்யதே-உடம்பு
கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.
பொருள் : எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர்
இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்;
உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.
பிறத்தல், இருத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், மாய்தல் ஆகிய ஆறுவித
பாவ விகாரங்கள் பூதங்களாலாகிய உடலத்துக்கு உண்டு; ஆத்மாவுக்கு விகாரம்
இல்லை.
21. வேதாऽவிநாஸிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்
பார்த-பார்த்தா! ஏநம்-இந்த பொருள் (ஆத்மா), அவ்யயம்-மாறாதது,
நாஸிநம்-அழிவற்றது, நித்யம்-என்றும் உளது, அஜம்-பிறப்பற்றது, ய: புருஷ:
வேத-எந்த மனிதன் உணர்கிறானோ, ஸ: கதம் கம் காதயதி ஹந்தி-அவன் யாரை கொல்வது?
யாரை கொல்விப்பது?
பொருள் : இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை?
ஆத்மா செயலற்றது. ஆத்மஞானம் அடையப்பெற்றவன் அகங்காரமற்றவனாதலால்
எவ்வினைக்கும் தான் கர்த்தா என்ற உணர்ச்சி அவனுக்கு வருவதில்லை. ஒரு
வினையும் ஆத்ம ஞானியைச் சாராது என்பதற்குச் சான்றாகக் கொல்லுதல்
கொல்வித்தல் ஆகிய இரண்டு கொடிய வினைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. எச்செயலைச்
செய்தாலும், செயல்புரிந்தேன் என்ற எண்ணம் ஆத்மஞானியிடம் இல்லை. ஞானசாதனம்
பழகுபவன் தனக்குற்ற கர்மத்தைச் செய்து கொண்டிருப்பதற்கிடையில் தன்னைக்
கர்த்தாவாக உணரலாகாது.
22. வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி
ததா ஸரீராணி விஹாய ஜீர்ணாந்
யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ
யதா நர:-எப்படி மனிதன், ஜீர்ணாநி வாஸாம்ஸி விஹாய-பழைய துணிகளை நீக்கி விட்டு
நவாநி
க்ருஹ்ணாதி-புதியதை எடுத்துக் கொள்கிறானோ, ததா தேஹி ஜீர்ணாநி ஸரீராணி
விஹாய-அவ்வாறே ஆத்மா நைந்த உடல்களை களைந்து, அந்யாநி நவாநி ஸம்யாதி-வேறு
புதியதை அடைகிறான்.
பொருள் : நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள்
கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.
பழைய துணியை எறிந்துவிட்டு மனிதன் புதியது தேடுவதில்லை. புதியது
கைக்குக் கிடைத்தபின்பே பழையது புறக் கணிக்கப்படுகிறது. பாம்பு புதிய
சட்டையைப் பண்ணிக் கொண்டு பழையதை நீக்குகிறது. அங்ஙனம் ஆத்மா ஒரு சரீரத்தை
விடுதற்கு முன்பே, தன் வினைக்கு ஏற்றாற் போன்று சூக்ஷ்மமாகப் புதியது
ஒன்றைப் பண்ணிக்கொள்கிறது. அது காரண சரீரம் என்றும் சூக்ஷ்ம சரீரம் என்றும்
சொல்லப்படுகிறது. மரத்தின் நுண்ணிய விதை போன்று அது நெடுநாள் தோன்றா
நிலையிலிருந்து பிறகு பிறக்கிறது. ஸ்தூல உடல் எடுப்பதை நாம் பிறப்பு
என்கிறோம்.
23. நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஸோஷயதி மாருத:
ஏநம் ஸஸ்த்ராணி ந சிந்தந்தி-இவனை ஆயுதங்கள் வெட்டுவதில்லை, ஏநம் பாவக:
ந, தஹதி-இவனை நெருப்பு எரிப்பதில்லை, ஏநம் ஆப: ந க்லேதயந்தி-இவனை தண்ணீர்
நினைப்பதில்லை, மாருத: ச ந ஸோஷயதி-காற்றும் உலர்த்துவதில்லை.
பொருள் : இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.
ஐம்பெரும் பூதங்களில் ஆகாசம் செயலற்றது. ஆகையால் அதைப்பற்றிய பேச்சு
ஈண்டு எழவில்லை. பாக்கி நான்கு பூதங்களின் செயல் ஆத்மாவினிடத்துச் செல்லா.
மண்ணிலிருந்து ஆயுதம் வருகிறது. பிளவுபடாப் பொருள் ஒன்றை வெட்டுவ தெங்ஙனம்?
பூதாகாசத்தையே, ஏனைய நான்கு பூதங்களும் விகாரப்படுத்த முடிவதில்லை. பின்பு
அதற்கு அப்பாலுள்ள சிதாகாசத்தை அவை பாழ்படுத்தா என்பது சொல்லாமலே
விளங்குகிறது.
24. அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽஸோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந:
அயம் அச்சேத்ய:-இவன் பிளத்தற்கரியவன், அயம் அதாஹ்ய:-எரிக்கப் பட
முடியாதவன், அக்லேத்ய:-நனைக்கப் படமுடியாதவன், அஸோஷ்ய:-உலர்த்தப்
படமுடியாதவன், நித்ய: ஸர்வகத:-நித்தியன்; எங்கும் நிறைந்தவன், ஸ்தாணு
அசல:-உறுதி உடையவன்; ஆசையாதான் ஸநாதந:-என்றும் இருப்பான்.
பொருள் : பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும்,
உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்;
அசையாதான்; என்றும் இருப்பான்.
இவ்வாத்மா வெட்டப்படுகிறதில்லையாதலால் அது நித்தியமாயுள்ளது. ஓர்
இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் இல்லாதது நித்தியப்பொருள் ஆகாது.
ஏனென்றால் இல்லாத இடத்துக்கு அது அநித்தியமாய்விடும். நித்தியமாதலால் அது
எங்கும் நிறை பொருள் ஆகிறது. இடம் மாறுவது அசைவது எனப்படுகிறது. எங்கும்
நிறைபொருளோ போவதற்குப் புதிய இடமில்லையாதலால் அது ஸ்தாணு, ஸ்திரமாய்
இருப்பது. அப்படி நிலைத்திருப்பதால் அது அசலம், அசைவற்றதெனப்படுகிறது.
எதற்குப் போக்கும் வரவும் இல்லையோ அது ஸநாதனம்; உண்டுபண்ணப்படாதது. அது
எப்பொழுதுமிருப்பதாகிறது.
ஆத்மாவானது சொல்லில் அடங்காத தொன்மையது ஆயினும் வெவ்வேறு சொற்களால் அதை
விளக்குவதால் ஏதேனும் ஒருவித விளக்கம் ஒருவர் உள்ளத்தில் படியலாம். அதன்
உண்மை மனதில் படிகின்றவளவு துக்க நிவிருத்தியாகும். யாண்டும் வேண்டப்படாத
துக்கத்தை அக்ஞானத்தால் மனிதன் வருவித்துக்கொண்டு தனது மேன்மைகளையெல்லாம்
இழக்கிறான். அக்கீழ்மை வேண்டப்படுவதன்று என்று அறிவுறுத்துதற்கே வாசுதேவர்
இத்தனைவித விளக்கங்களைக் கையாளுகிறார்.
25. அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஸோசிதுமர்ஹஸி
அயம் அவ்யக்த:-இந்த ஆத்மா புலன்களுக்கு புலப் படாதவன், அயம்
அசிந்த்ய:-மனத்தால் சிந்தனைக்கு அரியவன், அயம் அவிகார்ய:-மாறுதல்
இல்லாதவன், உச்யதே-என்று கூறப் படுகிறது, தஸ்மாத் ஏநம் ஏவம் விதித்வா-இவனை
இவ்வாறு அறிந்து கொண்டு அநுஸோசிதும் அர்ஹஸி-வருத்தப் படாமல் இரு.
பொருள் : தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப! ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்.”
ஆத்மா ஓர் இந்திரியத்துக்கும் விஷயமாகாதிருப்பதால் அது அவ்யக்தம்
எனப்படுகிறது. இந்திரியங்களுக்கு எட்டாப் பொருள் ஒன்று மனதிலும் படியாது.
ஆதலால் அது அசிந்த்யம். மாறுபடுகின்ற காற்று, தீ, நீர், நிலம் ஆகிய நான்கு
பூதங்களும் நன்கு கட்புலனாவது போன்று மாறுபடாத ஆகாசம் கட்புலனாவதில்லை.
ஆகாசத்தின்கண் அவயவங்கள் இன்மையால் அது மாறாதது. சிதாகாசமாகிய
ஆத்மாவுக்கும் அவயவம் இல்லையாதலால் விகாரத்தை, மாறுபடும் தன்மையை அதனிடம்
காணமுடியாது. இனி, அதைக் குறித்து வருந்துவது எங்ஙனம் பொருந்தும்?
26. அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்
ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் ஸோசிதுமர்ஹஸி
அத ச த்வம்-ஆயினும், ஏநம் நித்யஜாதம் நித்யம் ம்ருதம் வா மந்யஸே-இந்த
ஆத்மா எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது எப்போதும் இறந்து
கொண்டே இருப்பான் என்று நினைப்பாயானால், மஹாபாஹோ-நீண்ட கைகளை உடையவனே,
ததாபி த்வம் ஏவம் ஸோசிதும் ந அர்ஹஸி-அப்போதும் வருத்தப்படுவது தகாது.
பொருள் : அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று
கருதினால், அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல்
தகாது.
நித்தியவஸ்து ஒன்றும் இல்லை என்பது லோகாயதர்களுடைய கோட்பாடு.
பேச்சுக்காக பகவான் இங்கு அதை எடுத்துக்கொள்கிறார். அவர்களுடைய கொள்கை
உண்மையெனின் அப்பொழுதும் வருந்துதற்கு இடமில்லை. ஒருவன் ஆஸ்திகனாக
இருப்பதும் நாஸ்திகனாயிருப்பதும் அவனுடைய வாழ்க்கைக்கு முக்கியமானதன்று.
கொள்கை எதுவாயினும் அவன் வருத்தப்படாதிருக்க வேண்டும். துயரம் ஒரு மனிதனை
அழித்து விடுவதுபோன்று வேறு எதும் அவனுக்குக் கேடு செய்யாது.
27. ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி
ஜாதஸ்ய ம்ருத்யு: த்ருவ: ஹி-பிறந்தவன் சாவது உறுதி எனில், ம்ருதஸ்ய ச
ஜந்ம த்ருவம்-செத்தவன் பிறப்பது உறுதி எனில், தஸ்மாத் அபரிஹார்யே
அர்தே-ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்துக்காக, த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ
துயரப் படுவது தகாது.
பொருள் : பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில், இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று.
இது இன்னும் முக்தியடையாதவர்களைக் குறித்துப் பேசும் பேச்சாகும்.
ஆசையிருக்கும் பரியந்தம் பிறப்பதும் இறப்பதும் இயல்பு. வினையின்படி வருகிற
சாவைத் தடுக்க யாருக்கும் இயலாது.
நாஸ்திகரின் கோட்பாட்டின்படி வினையிருக்கும் பரியந்தம் பிறப்பு இறப்பு
இருக்கிறது. வினைமுடிவது தீபத்தில் எண்ணெய் முடிவது போன்றது. எரிகின்ற
தீபம் பிறகு ஒன்றுமில்லாது போய்விடுகிறது. அதே விதத்தில் வினை முடிந்ததும்
மனிதன் என்னும் தோற்றம் கலைந்து போய்விடுகிறது. நவீன
நாஸ்திகர்களுக்கிடையில் இன்னொரு கோட்பாடு உண்டு. களிமண்ணில் வடிவம் செய்து
உருமாற்றுவது போன்று பிரகிருதியில் உயிர்கள் என்ற வடிவங்கள் மாறி மாறி
அமைகின்றன. அச் செயல் பிறப்பு இறப்பு என்னும் பெயர் பெறுகிறது. அதற்கு ஏன்
வருந்தவேண்டும் என்பது அவர்களின் கேள்வி.
28. அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா
பாரத-பாரதா! பூதாநி அவ்யக்தாதீநி-உயிர்கள் ஆரம்பம் தெளிவில்லை,
அவ்யக்தநிதநாநி ஏவ-இறுதியும் தெளிவில்லை, வ்யக்தமத்யாநி-நடுநிலைமை
தெளிவுடையது, தத்ர கா பரிதேவநா-இதில் துயற்படுவது என்ன ?
பொருள் : பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது; இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்ன?
உற்றார் உறவினரெனத் தோன்றும் உயிர்களெல்லாம் இடையில் வந்தவர்கள். கனவில்
காணப்படுபவர் முன்பிருந்ததில்லை பின்பு இருக்கப்போவதில்லை; இடையில்
இருந்தும் உண்மையில் இல்லாதவரேயாம்; பந்துக்கள் எனப்படுவர்கள் லோகா
யதர்களின் கோபாட்டின்படி பூதங்களின் சேர்க்கையால் காரண காரியமாக இடையில்
வந்தவர்கள். கடைசியில் அவர்கள் இருக்கப்போவதில்லை. ஆகையால் இடையில்
தோன்றியுள்ளவர்களுக்காக இன்னல்படுவது தகாது.
லோகாயதத்தின் கோட்பாடு இது ஈறாக மூன்று சுலோகங்களில் முடிவடைகிறது. பழையபடி ஆத்ம தத்துவ விசாரத்துக்கு பகவான் திரும்புகிறார்.
29. ஆஸ்சர்யவத்பஸ்யதி கஸ்சிதேந
மாஸ்சர்யவத்வததி ததைவ சாந்ய:
ஆஸ்சர்யவச்சைநமந்ய: ஸ்ருணோதி
ஸ்ருத்வாऽப்யேநம் வேத ந சைவ கஸ்சித்
கஸ்சித் ஏநம்-யாரோ ஒருவன், ஆஸ்சர்யவத் பஸ்யதி-வியப்பெனக் காண்கிறான்,
ஆஸ்சர்யவத் வததி-வியப்பென ஒருவன் சொல்கிறான், ஆஸ்சர்யவத் அந்ய
ஸ்ருணோதி-வியப்பென ஒருவன் கேட்கிறான், கஸ்சித் ஸ்ருத்வா அபி ஏநம் ந ஏவ
வேத-கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்.
பொருள் : இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன்
சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான்
எவனுமிலன்.”
கட்புலனாகின்ற உலகப் பொருள்களைப் போன்றதல்ல ஆத்மா. பொறி புலன்களுக்கு
அதீதத்திலுள்ளதை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பே ஆயிரத்தில் ஒருவனுக்குக்
கிடைப்பதரிது. ஆகையால் ஆத்ம விசாரம் செய்கின்றவர்களே
ஆச்சரியத்துக்குரியவர்களாம். மன பரிபாகம் ஏற்படாமையால் அவர்களில்
பெரும்பான்மையோருக்கு ஆத்ம தத்துவம் விளங்குவதில்லை. அழுக்குப் படிந்த கரடு
முரடான கண்ணாடியின் வாயிலாக விளக்கு வெளிச்சம் சிதைந்து வெளிவருவது போன்று
ஆத்ம சொரூபம் அவர்களுக்கு விளங்கியும் விளங்காமலும் இருக்கிறது.
30. தேஹீ நித்யமவத்யோऽயம் தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஸோசிதுமர்ஹஸி
பாரத-பாரதா, அயம் தேஹீ-இந்த ஆத்மா, ஸர்வஸ்ய தேஹே-எல்லா உடலிலும்,
நித்யம் அவத்ய-எப்பொழுதும் கொல்லப் படமுடியாதவன், தஸ்மாத் ஸர்வாணி
பூதாநி-ஆகவே எந்த உயிரின் பொருட்டும், த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ
வருந்துதல் தகாது.
பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன். ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!
லோகாயதர்களுடைய கோட்பாடு இங்கு நிராகரிக்கப்படுகிறது. அதன்மேல் ஆத்ம
தத்துவத்தைப் பற்றிய முடிவான சித்தாந்தமும் இயம்பப்படுகிறது. ஆத்ம ஞானமும்
துக்க நிவிருத்தியும் மனிதன் மேன்மையுறுதற்கு இன்றியமையாதவைகள் என்பது
நன்கு வற்புறுத்தப்படுகின்றன.
31. ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே
ஸ்வதர்மம் சாவேக்ஷ்ய அபி-ஸ்வதர்மத்தைப் கருதினாலும், விகம்பிதும் ந
அர்ஹஸி-நீ நடுங்குதல் தகாது, க்ஷத்ரியஸ்ய தர்ம்யாத் யுத்தாத்
அந்யத்-மன்னருக்கு அறப்போரைக் காட்டிலும் ஸ்ரேய: ந வித்யதே-உயர்ந்ததொரு
நன்மை இல்லை.
பொருள் : ஸ்வதர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.
அரசனுக்கு உயிரிலும் பெரிதாக உள்ளது அறம். இது போன்ற போர் புரிவதால்
அறம் வளர்க்கப்படுகிறது. போரினின்று விலகுவதால் மறம் மேலோங்குகிறது. மறம்
மேலோங்க விடுபவன் அரசன் ஆகான். அறம் செய்யாது மறம் செய்யும் மனிதனோ
சிரேயஸைப் பெறாது இழிவை அடைவான். ஒரு மனிதனுக்கு சிரேயஸைத் தருபவைகளில்
முதலானது ஸ்வதர்மம். எம்மனிதன் எச்செயலுக்கு நன்கு தகுதியுடையவனாகிறானோ
அச்செயல் அவனுடைய ஸ்வதர்மமாம். கிடைப்பதற்கு அரிய ஆங்காலம் அல்லது
அனுகூலமான காலத்தை ஒரு மனிதன் எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற கேள்விக்கு
இனி விடை வருகிறது.
32. யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஸம்
பார்த-பார்த்தா, யத்ருச்சயா உபபந்நம்-தானே வந்திருப்பதும், அபாவ்ருதம்
ஸ்வர்கத்வாரம்-திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில், ஈத்ருஸம்
யுத்தம்-இத்தகைய போர்
ஸுகிந: க்ஷத்ரியா: லபந்தே-பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்.
பொருள் : தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது. இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்!
வாழ்க்கையில் தற்செயலாய் வந்தமையும் ஆங்காலம் ஒவ்வொரு மனிதனுக்கும்
உண்டு. முறை பிறழாது ஒருவன் தன் கடமையைச் செய்துகொண்டு போக
வல்லவனாகவேண்டும். நதியில் நீரோட்டத்தை எதிர்த்து ஓடத்தைச்
செலுத்துவதுபோன்று அது இடர் சூழ்ந்த செயலாகும். பிறகு கடல் பொங்கும் வேளை
யொன்று வருகிறது. அப்பொழுது நதியில் நீர் எதிர்த்து ஓடுகிறது. ஓடத்தைக்
கடத்துதற்கு அது அனுகூலமாகிறது. துடுப்புப் போடாவிட்டாலும் அது குறியை
நோக்கி நகர்கிறது. காற்றும் வசதியாகவே தொடர்ந்து வீசுகிறது. அப்பொழுது பாயை
விரிப்பதுதான் பாக்கி. சிறு முயற்சியில் பெரிய காரியம் நிறைவேறுகிறது.
இதுதான் தற்செயலாய் வந்தமையும் நற்காலம். அர்ஜுனனுக்கு அந்த வாய்ப்பு
இப்பொழுது கிடைத்திருக்கிறது. வனவாச துக்கமும் சோதனையும்
முடிவடைந்துவிட்டன. இனி, தன் கடமையைச் சிறிது முயற்சியோடு செய்தால்
போதுமானது. வலிய வந்து விண்ணுலகும் மண்ணுலகும், வெற்றியும் கீர்த்தியும்
அமையப் போகின்றன. க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றிய சந்தேகமும் மனக் கிலேசமும்
இவ்வேளையில் பொருந்தா.
இதுபோன்று ஆங்காலம் எல்லா மனிதருக்கும் எப்பொழுதாவது வந்து
வாய்ப்பதுண்டு. அதைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்பவனே இவ்வுலகில் சீரும்
சிறப்பும் அடையப்பெறுகிறான். ஆங்காலத்தைப் பயன்படுத்தாது விட்டுவிட்டால்
வரும் கேடு யாது என்பதற்கு விடை வருகிறது:
33. அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி
அத-அன்றி, இமம் தர்ம்யம் ஸங்க்ராமம்-இந்தத் தர்மயுத்தத்தை, த்வம் ந
கரிஷ்யஸி சேத்-நீ நடத்தாமல் விடுவாயானால், தத: ஸ்வதர்மம் கீர்திம் ச
ஹித்வா-அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று, பாபம்
அவாப்ஸ்யஸி-பாவத்தையடைவாய்
பொருள் : அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய்.
அதர்மத்தைச் செய்பவன் யாண்டும் கேடு அடைகிறான். தன் கடமையாக வந்து
அமைந்த தர்மத்தைத் தக்க தருணத்தில் செய்யாதவன் அதனினும் பெருங்
கேட்டையடைகிறான். தகுந்ததைச் செய்யாமையால் வரும் கேடானது, தகாததைச்
செய்வதால் வரும் கேட்டைவிடப் பெரியதாம்.
முறையான இகலோக வாழ்க்கையைக் கீர்த்தி பின் தொடர்வது போன்று முறை தவறிய வாழ்க்கையை அபகீர்த்தி பின் தொடர்கிறது. அது எப்படியெனில்:
34. அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேऽவ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே
பூதாநி ச-உலகத்தாரும், தே அவ்யயாம்-உனக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய,
அகீர்திம் அபி கதயிஷ்யந்தி-வசை உரைப்பார்கள், ஸம்பாவிதஸ்ய-புகழ் கொண்டோன்
அகீர்தி: மரணாத் அதிரிச்யதே-அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?
பொருள் : உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?
எப்படியாவது உயிர் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற உணர்ச்சி விலங்கினத்தைச்
சேர்ந்தது. வீரன் ஒருவனுக்கோ நன்கு உயிர்வாழவும் தெரியும். வேண்டுமிடத்து
உயிர் வழங்கவும் தெரியும். அப்படி முறையாக மகிழ்ச்சியுடன் உயிரைக்
கொடுப்பதால் அவன் புகழ் பரவுகிறது. எதிரி காலால் உதைக்கையில் அவன் காலைத்
தொட்டு வணங்கி உயிர்ப்பிச்சை கேட்பது எவ்வளவு இழிவோ அதிலும் பன்மடங்கு
புன்மையது பழிக்கு ஆளாகி உயிர்வாழ்ந்திருத்தல். உலகில் பழிப்பவர் தமது
மனத்துக்குத் தோன்றியதையெல்லாம் முகாமையாக வைத்துப் பழிப்பர்.
எப்படியெனில்:
35. பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்
ச யேஷாம் த்வம் பஹுமதோ பூத்வா-மேலும் எவர்களுடைய (கருத்தில்) நீ
நன்மதிப்பைப் பெற்று இருந்து, லாகவம் யாஸ்யஸி-தாழ்மையாய் அடைவாயோ, மஹாரதா:
த்வாம்-அந்த மகாரதர்கள் உன்னை, பயாத் ரணாத் உபரதம்-பயத்தினால்
யுத்தத்திலிருந்து பின்வாங்கியவனாக, மம்ஸ்யந்தே-கருதுவார்கள்.
பொருள் : நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.
ஜன்ம சத்துருக்களாகிய துர்யோதனன் முதலாயினோர் அர்ஜுனனுடைய
பராக்கிரமத்தைப் பாராட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. மகாதேவனை
எதிர்த்துப் போர்புரிந்தவன் என்றும், பாசுபதாஸ்திரத்தைப் பெற்றவன் என்றும்
பார்த்தனைப் பாராட்டி வந்துள்ளார்கள். ஆனால் அவனை எப்படியாவது
ஒழித்துவிடவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அவர்கள். இந்த
நெருக்கடியில் அர்ஜுனன் அன்பின் வழியில் பின்வாங்கினான் என்று அவன் செயலைப்
பொருள்படுத்த மாட்டார்கள்; அஞ்சிப் புறங்காட்டி ஓடினான் என்று
இகழ்வார்கள். போற்றுதல் மிக எளிதில் தூற்றுதலாக மாறிவிடும். அந்த
இகழ்ச்சிக்குப் பிறகு எவ்விதத்திலும் ஈடு தேடிக்கொள்ள முடியாது. பயம்
வீரனுக்கு அழகன்று. பயமுடையார் இவ்வுலகில் எதற்கும் உதவார் என்பது
வெளிப்படை. அச்சத்துக்கு இடங் கொடுத்து நாளைக்கு வருந்துதற்கேற்ற ஒரு செயலை
இன்று செய்வது தகாது. எள்ளி நகையாடுதல் இன்னும் எப்படியெல்லாம்
வடிவெடுக்கும் எனில்:
36. அவாச்யவாதாம்ஸ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்
தவ அஹிதா:-உனக்கு வேண்டாதார், தவ ஸாமர்த்யம் நிந்தந்த-உன் திறமையைப்
பழிப்பார்கள், பஹூந் அவாச்யவாதாம் ச-சொல்லத் தகாத வார்த்தைகள் பல, வதிஷ்யந்
-சொல்லுவார்கள், தத: து:கதரம் நு கிம்-இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது
பொருள் : உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள்.
உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?
ஒருவன் கெட்டுப் போய்விட்டால் அவனுடைய வாழ்க்கையின் காட்சி திடீரென்று
மாறிவிடுகிறது. காலமெல்லாம் அர்ஜுனனைப் புகழ்ந்து கொண்டிருந்தவர்கள் இனி
இகழ்ந்து பேசுதற்குக் கூசார்கள். அவன் பெற்றிருந்து பொருள் சேர்ந்த
புகழ்ச்சி. அவனைப்பற்றி நினைக்கும்பொழுதே எதிரியின் உள்ளத்தில் அச்சம்
வடிவெடுக்கும். பரபரப்போடு பார்த்தன் போர்க்களத்துக்கு வந்தது பகைவர்
உற்சாகத்துக்கே அணைகட்டிற்று. இனி, அவன் பின்வாங்குவானாகில் அங்ஙனம்
கட்டப்பட்ட அணை உடைக்கப்படும். முன்பு தாங்கள் புகழ்ந்து பேசியதற்கே புதிய
வியாக்யானம் வந்தமையும். மனிதனால் கேட்டுச் சகிக்க முடியாத சுடு சொற்களை
வேண்டியவாறெல்லாம் வழங்குவார்கள். இவ்வேளையில் யுத்தத்தினின்று விலகுவது
பெருந்தவறாகும். அதனால் அர்ஜுனனுடைய ஆண்மையே அடிபட்டுப்போம். அதற்கு மேல்
பெருவாரியாக வரும் வசைச்சொற்கள் அவனை இடையறாது
துன்புறுத்திக்கொண்டிருக்கும். சிறுமையையும் துன்பத்தையும் வலிய
வருவித்துக்கொள்வானேன்? போர்புரிவது பெருங்கேடு என்று சொன்ன அர்ஜுனனுக்கு
பகவான் என்ன சொல்கிறார் என்றார்.
37. ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய:
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்-கொல்லப்படினோ வானுல கெய்துவாய், ஜித்வா வா
போக்ஷ்யஸே மஹீம்-வென்றால் பூமியாள்வாய், தஸ்மாத் கௌந்தேய-ஆகவே குந்தி
மைந்தனே, க்ருதநிஸ்சய: யுத்தாய உத்திஷ்ட-நிச்சயித்துக் கொண்டு போருக்கு
எழுந்திரு
பொருள் : கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.
போர் புரியாமையினால் வரும் சீர்கேட்டை யெல்லாம் மேலே சொல்லியான பிறகு,
போர்புரிவதால் வரும் சீர்மை ஈண்டு இயம்பப்படுகிறது. அறப்போர் இம்மையிலும்
மறுமையிலும் இன்பம் தருமேயொழிய ஒரு நாளும் துன்பம் தராது. அப்படி
வலியக்கிடைத்த பெரு வாய்ப்பை எந்தப் போர்வீரன் தான் விட்டுவிடுவான்.
லௌகிகமாகப் பார்க்கிறவிடத்தும் அர்ஜுனன் துன்புறுவதும், போரினின்று
பின்போவதும் பொருந்தாது என்பது பகரப்பட்டது. இனி, எத்தகைய மனப்பான்மையுடன்
கடமையைச் செய்தால் அது யோகசாதனமாகும் என்ற கோட்பாடு வருகிறது.
38. ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி
ஸுக – து:கே-இன்பம், துன்பம், லாப – அலாப= பேறு, இழவு, ஜய அஜயௌ-வெற்றி,
தோல்வி, ஸமே க்ருத்வா-நிகரெனக் கொண்டு, ததோ யுத்தாய யுஜ்யஸ்வ-அதற்கு பின்
யுத்தத்துக்கு தயாராவாயாக, ஏவம் ந பாபம் அவாப்ஸ்யஸி-இவ்விதம் (செய்தால்)
பாவத்தை அடைய மாட்டாய்.
பொருள் : இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக்
கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.
சுகத்துக்கு ஏதுவான லாபம், ஜயம் ஆகியவைகளில் விருப்பமும், துக்கத்துக்கு
ஏதுவான நஷ்டம், அபஜயம் ஆகியவைகளில் வெறுப்பும் கொள்ளுதல் பாமரர் இயல்பு.
தங்களைப் பண்படுத்துவோர் அங்ஙனம் விருப்பும் வெறுப்பும் கொள்ளாது நிகழ்வன
யாவையும் நடுநிலையிலிருந்து சமனாகக் கருதவேண்டும். விருப்பும்
வெறுப்பும்தான் மனிதனைக் கருமத்தில் கட்டுப்படுத்துகின்றன. கருமத்தில்
அல்லது கருமபலனில் பற்றில்லாது அதைச்செய்யும் பொழுது பழைய கருமம்
குறைகிறது; புதியது ஒன்றும் சேர்க்கப்படுவதில்லை. இந்த மனநிலை முக்திக்கு
மார்க்கமாகிறது.
உலகப்பற்றுடைய ஒருவன் செய்கிற அதே கர்மத்தைக் கர்மயோகியும் செய்கிறான்.
ஆனால் மனநிலையில் இருவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மனநிலையைக்
கொண்டுதான் எது பந்தபாசம், எது பற்றற்ற பாங்கு என்று தெரிந்து கொள்ள
முடியும்.
39. ஏஷா தேபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி
பார்த-பார்த்தா, ஏஷா புத்தி தே-இந்த புத்தி (அறிவுரை) உனக்கு, ஸாங்க்யே
அபி ஹிதா-ஸாங்கிய வழிப்படி சொன்னேன், து இமாம் யோகே ஸ்ருணு-இனி யோக வழியால்
(சொல்லுகிறேன்) கேள், யயா புத்த்யா யுக்த: இந்தப் புத்தி கொண்டவன்
கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி-கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.
பொருள் : இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக
வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச்
சிதறிவிடுவான்.
ஆறு தர்சனங்களில் ஒன்று ஸாங்கியம் என்ற பெயர் பெறுகிறது. அது கபில
முனிவர் இயற்றியது. எண்ணிக்கை என்பது ஸாங்கியம் என்ற சொல்லுக்கு அர்த்தம்.
பிரகிருதியும் புருஷனும் சேர்ந்து 25 தத்துவங்களாகின்றன என்பது அதன்
கோட்பாடு. இங்கு பகவான் ஸாங்கியம் என்று சொல்லுவது ஆத்ம ஞானத்தைப்பற்றிய
விசாரம் ஒன்றேயாம். பின்பு யோகம் என்று சொல்லப்படுவது பெரிதும்
கருமயோகமாகும். ஒவ்வொரு கலைஞானத்திலும் சாஸ்திரத்திலும் தத்துவ விசாரம்
அல்லது உபபத்தி (தியரி) என்றும் அனுஷ்டானம் (பிராட்டிஸ்) என்றும் இரண்டு
அம்சங்கள் இருக்கின்றன. முந்தியது புத்தியில் தத்துவத்தை நன்றாகப்
படியும்படி செய்கிறது. பிந்தியது பழக்கத்தில் வந்து பயன்படுகிறது. சிற்பி
ஒருவன் வீடுகட்டும் விஷயத்தை மனதில் தெளிபட ஓர்கிறான். அது தத்துவவிசாரம்.
பின்பு அதன்படி அதைக் கட்டி முடிக்கிறான்; அது அனுஷ்டானம். விசாரம்,
அனுஷ்டானம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. நன்கு
விசாரிக்கின்றவன் முறையாக அனுஷ்டிக்கக் கூடும். திரும்பத் திரும்ப
அனுஷ்டிக்கின்றவனுக்கு அதன் தத்துவம் உள்ளத்தில் தெளிவுபடப் பதியும்.
இங்கு பகவான் தத்துவ விசாரத்தை ஸாங்கியம் என்றும் அதன் அனுஷ்டானத்தை
யோகம் என்றும் சொல்லுகிறார். ஆக, வாழ்க்கை சம்பந்தமான உண்மைகளை
விசாரிப்பதும் அனுஷ்டிப்பதும் சேர்ந்து பெரு நன்மை விளைவிக்கும். பலபேர்
விசாரித்துப் பார்க்காது வினையாற்றுகின்றனர். சிலர் கருத்தில்
வாங்குவார்கள்; செயலில் கொண்டுவரமாட்டார்கள். அறிவைப்பெறுவதும், அது
செயலாகப் பரிணமிப்பதும் சேர்ந்தே இருக்க வேண்டும். கர்மயோகம்
பூர்த்தியாகாவிட்டால் அது வீண் நஷ்டந்தானே என்ற சந்தேகத்துக்கு விடை
வருகிறது:
40. நேஹாபிக்ரமநாஸோऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்
இஹ-இதில் (கர்ம யோகத்தில்), அபிக்ரமநாஸ: ந அஸ்தி-விதைக்கு (முயற்சிக்கு)
நஷ்டம் இல்லை, ப்ரத்யவாய: ந வித்யதே-நேரெதிரான விளைவும் இல்லை, அஸ்ய
தர்மஸ்ய ஸ்வல்பம் அபி-இந்த தர்மத்தில் (கர்ம யோகம்) சிறிதிருப்பினும், மஹதோ
பயாத் த்ராயதே-பேரச்சத்தினின்று காப்பாற்றும்.
பொருள் : இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று.
இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று
காப்பாற்றும்.
வீடு கட்டுபவர் அதற்குக் கூரை போடாவிட்டால் அதுவரையில் செய்த முயற்சி
வீணாய்ப் போம். பயிர்த் தொழில் செய்பவர்கள் அறுவடை செய்யாவிட்டால்
பட்டபாடெல்லாம் பயன்படாமற்போம். கருமயோக அனுஷ்டானம் அத்தகையதன்று. ஒரு நாள்
உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று அனுஷ்டானத்துக்கு ஏற்றவளவு
யோகத்தில் பயன் உண்டு. மருந்து வகைகளை முறைதவறிக் கையாண்டால் நோயைப்
போக்குதற்குப் பதிலாக உயிரைப் போக்கும் விஷமாக அவை மாறியமைக்கூடும்.
அத்தகைய குற்றம் யோகத்தில் ஏதாவது வந்துவிடுமோ என்ற சந்தேகம்
வேண்டியதில்லை. அதைக் கொஞ்சம் அப்பியசித்தாலும் ஆத்ம சொரூபத்தை அது விளக்க
வல்லது. ஆத்ம சொரூபத்தை அறிகிறவன் ஜனன, மரண சம்பந்தமான பெரும் பயத்தினின்று
விடுபடுகிறான்.
ஸாங்கியம், யோகம் ஆகிய இரண்டையும் முறையாகக் கையாளுபவர்களுக்கு வந்தமையும் நன்மை யொன்று உண்டு. அதாவது:
41. வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம்
குருநந்தந-குருகுலத் தோன்றலே! இஹ வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகா-இந்த
உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமையுடையது,
அவ்யவஸாயிநாம்-உறுதியில்லாதோரின் புத்தய:-புத்திகள், பஹுஸாகா-பல
கிளைப்பட்டது, அநந்தா: ச-முடிவற்றது,
பொருள் : குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.
பல மாணாக்கர்கள் ஒரு கணக்கைப் போடும்போது தப்பான விடைகள் கணக்கற்றவை
வரக்கூடும். ஆனால் சரியான விடை ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அங்ஙனம் காமிய
கருமங்கள் செய்கின்றவர்களுக்குக் கணக்கற்ற புத்திகள் உருவெடுக்கின்றன.
எத்தனையோ விதங்களாக எண்ணியும் செயல் புரிந்தும் அவர்கள் ஏமாற்றம்
அடைகின்றனர். ஆனால் செயல்களெல்லாம் ஈசுவரனுக்குரியவைகள் என்றறிந்து
அவனுக்கே தொண்டு புரிகின்றவனுக்கு புத்தி ஒன்றேயாம்.
மனதை ஒருமுகப்படுத்துதல் உலகக் காரியத்துக்கும் பயன்படும்,
பாரமார்த்திகப் பெரும்பேறு பெறுதற்கும் பயன்படும். முதலில் மனம்
ஒருமுகப்படுகின்றவளவு அதற்கு வல்லமை வருகிறது. விரிந்தோடும் சூரிய
கிரணங்களைப் பூதக்கண்ணாடியின் வாயிலாகக் குவியச்செய்தால் ஒளியும் வெப்பமும்
குவிந்து அதிகரிக்கின்றன. ஒரு செத்தையில் தீ மூட்டுதலும் அப்பொழுது
சாத்தியமாகிறது. அங்ஙனம் மனது குவியும்பொழுது எதை எண்ணுகிறதோ அதன் பாவனையை
அது விரைவில் எடுக்கிறது; செயலும் திறம்பட்டதாகிறது. அர்ஜுனன்
துரோணாசாரியரிடத்தில் மாணாக்கனாயிருந்த போது ஒரு மரத்தின்மீது வைத்த குறியை
மற்றவர்கள் அம்பால் அடிக்க இயலாதிருந்த சமயத்தில் அவன் எதை எளிதில்
அடித்துப் பொத்தலாக்கினான். குவிந்த மனமே அவ்வெற்றிக்குக் காரணமாயிற்று.
அமெரிக்காவில், நூலில் கட்டுண்டு ஓர் ஓடையில் தத்தளித்துக்கொண்டிருந்த
முட்டையோடுகளை மாணாக்கர்கள் துப்பாக்கியால் சுடமுடியவில்லை. முன்பு
துப்பாக்கியைக் கையால் கூடத் தொட்டறியாத விவேகானந்த சுவாமிகள் அவ்வோடுகளை
ஒரே தடவையில் சுட்டுச் சுக்கலாக்கினார். அதற்குக் காரணம் கேட்ட போது மனம்
குவிதல் என்று அவர் விடையிறுத்தார்.
நவீன பௌதிக சாஸ்திரிகளில் ஒருவராகிய ஜகதீச சந்திரவசு என்பவர்
மனிதர்களுக்குள்ள உணர்ச்சிகள் யாவும் மரம் செடி கொடிகளுக்கும் உண்டு என்று
காட்சி பூர்வமாக நிரூபித்துக் காட்டினார். அதையெல்லாம் தெரிந்துகொள்ளும்
வல்லமை அவருக்கு எப்படி உண்டாயிற்று என்று கேட்டபொழுது செடியின்
இயல்புகளைத் தெரிந்துகொள்ளுதற்கு மனதை ஒருமுகப்படுத்தி பாவனையில் நானே
செடியானேன் என்று பதிலுரைத்தார். குவிந்து ஒருமுகப்பட்ட மனதுக்கு எதையும்
தெரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டாகிறது.
ஒரே புத்தி படைத்திருப்பது எத்தகைய மகிமையையுண்டு பண்ணும் என்பதற்கு
ஸ்ரீமதி ராதையின் பிரேமை பக்தி சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். அவளுடைய
மனதும் இந்திரியங்களும் ஒரே ஒரு லட்சியத்துக்காகத்தான் வேலை செய்யும்.
உள்ளத்தில் எழும் எண்ணங்களெல்லாம் கிருஷ்ணனைப் பற்றியவைகள். கண்கொண்டு
பார்ப்பதெல்லாம் அவனோடு சம்பந்தப்பட்டவைகள். காதால் கேட்பதெல்லாம் அவன்
பெருமைக்கு விளக்கமாகின்றன. உண்ணும் உணவு அவன் ஊட்டுவதாகும். அவனது அருளே
உயிர்க்கு உயிராகிறது. மற்றொரு மகிமை ஸ்ரீமதி ராதையின் ஒருமை
புத்தியிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. குவிந்த மனமுடையார்க்கு ஓர்
இந்திரியம் செய்யும் தொழிலை மற்ற இந்திரியங்களும் செய்யக் கூடும்.
கிருஷ்ணனது வேணுகானம் சுரக்கிறது. அது காற்றில் மிதந்து எங்கும் பரவுகிறது.
ஸ்ரீமதி ராதையின் காதில் அந்த இன்னிசை விழுகிறது. அவள் உள்ளம் அந்த
ஓசைக்கு உறைவிடமாகிறது. உள்ளம், புறம் என்ற வேற்றுமை அகலுகிறது. ஓசை
வடிவினனாக, நாத பிரம்மமாகக் கிருஷ்ணன்தான் யாண்டும் நிறைந்துள்ளான்.
ஆங்குக் காது ஓசையைக் கேட்பதில் வியப்பொன்றுமில்லை. ஓசைக்கு ஒரு வடிவம்
உண்டு என்பதைக் கண் காண்கிறது; ஓசைக்கு ஒரு மணம் உண்டு என்பதை மூக்கு
முகர்கிறது; ஓசைக்கு ஓர் ஊறு உண்டு என்பதை மேனி உணர்கிறது. ஓசைக்குச்
சுவையொன்று உண்டு என்பதை நா நுகர்கிறது. ஓசையின் உட்பொருள் அனைத்தும்
எப்பொறிக்கும் புலனாகிறது. என்னே ஒருமை புத்தியின் மகிமை! இயற்கையில்
நோக்கரிய நுண்பொருளையும் நுகர்ந்தறிதற்கு ஒருமை புத்தியே உற்ற துணையாகிறது.
இறைவனையே கண்டுணரவும், அவனில் கலந்திருக்கவும் ஒருமை புத்தி முற்றும்
உதவுகிறது. ஒரு புத்தியுடையவன் மக்களுள் மேலோன். சாங்கியமும் யோகமும்
சேர்ந்தவிடத்துக் குவிந்த கூர்மையான புத்தி உண்டாகிறது.
பல புத்தியுடையவரின் போக்குப் பின்வருமாறு:
42. யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித:
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:
43. காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்
க்ரியாவிஸேஷபஹுலாம் போகைஸ்வர்யகதிம் ப்ரதி
44. போகைஸ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே
பார்த-பார்த்தா!வேதவாதரதா:-வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார்,
புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய-பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள்
பேசுகிறார்கள், ந அந்யத் அஸ்தி இதி வாதிந:-தமது கொள்கை தவிர மற்றது
பிழையென்கிறார்கள்.
காமாத்மாந:-ஆசைகளில் மூழ்கியவர்கள், ஸ்வர்கபரா:-சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்
ஜந்மகர்மபலப்ரதாம்-பிறப்புக்கும்
தொழிலுக்கும் பயன் வேண்டுவோர், போகைஸ்வர்யகதிம்-போகத்தையும் ஆட்சியையும்
வேண்டுவோர், க்ரியாவிஸேஷபஹுலாம்-பலவகையான கிரியைகள்.
தயா அபஹ்ருத சேதஸாம்-அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு, போக
ஐஸ்வர்ய ப்ரஸக்தாநாம்-போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர், வ்யவஸாயாத்மிகா
புத்தி:-நிச்சய புத்தி, ஸமாதௌ ந விதீயதே-சமாதியில் நிலைபெறாது.
பொருள் : வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற
(அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது
பிழையென்கிறார்கள்.
பொருள் : இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்.
பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும்
வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.
பொருள் : இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது.
ஆசை என்னும் பாசத்தில் கட்டுண்டு கிடப்பவர்கள் மக்களுள்
கடைத்தரமானவர்கள். இம்மையிலும் மறுமையிலும் இந்திரிய சுகங்களை நாடுதல்
ஒன்றிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். அவர்களது கல்வியும்,
கேள்வியும், சொல்வன்மையும் சிற்றின்பத்துக்கென்றே கையாளப்படுவனவாகின்றன.
வேதத்தில் கருமகாண்டம் இத்தகைய புன்மையரது புல்லியல்பை நிறைவேற்றுவதற்காக
அமைந்தது. பல் வகைப்பட்ட இன்பங்களை நாடிப் பிறவிப் பெருங்கடலில் அழுந்திக்
கிடப்பவர்க்கு மட்டும் அது பயன்படும். வேதங்கள் மிகப் பழையவை எனினும் அவை
புகட்டுவனவெல்லாம் சிறப்பு வாய்ந்தவைகளென்று எண்ணி ஏமாற்றமடையலாகாது.
இன்பங்களைப் பெறுவது வாழ்க்கையின் லட்சியமன்று. பரிபூரணமடைவதே முடிவான
லட்சியமாகும். அதற்கு ஞானத்திலும் யோகத்திலும் உறுதிபெற்ற உள்ளம் வேண்டும்.
வேதங்கள் புகட்டுகின்ற கரும காண்ட அனுஷ்டானத்தினின்று ஒருக்காலும்
உறுதியான உள்ளம் (சமாதி) உண்டாகாது. பரிபூரண நிலையை அடைவதற்கு
விலக்கப்படுவது எது, வேண்டப்படுவது எது என்ற கேள்வி பிறக்கலாம். அதற்கு
விடை வருகிறது. (42-44)
45. த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோக÷க்ஷம ஆத்மவாந்
வேதா-வேதங்கள், த்ரைகுண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன,
நிஸ்த்ரைகுண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக, நிர்த்வந்த்வ-இருமைகளற்று,
நித்யஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று, நிர்யோக÷க்ஷம-யோக ÷க்ஷமங்களைக்
கருதாமல் ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.
பொருள் : மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள்
பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. இருமைகளற்று,
எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை
வசப்படுத்தியவனாகுக.
ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணமயமாயிருப்பது பிரபஞ்சம். சுவர்க்கங்கள்
அனைத்தும் இப்பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கின்றன. இதிலிருந்து பெறுகின்ற
இன்பங்களுக்கு வழி காட்டியாயிருக்கும் நூல்களுக்கு வேதங்கள் என்று பெயர்.
அவைகள் எம்மொழியில், எக்காலத்தில், யாரால் இயற்றப் பெற்றிருப்பினும்
நிலையற்ற பிரபஞ்சத்தைப் பற்றியவைகளேயாம். முக்குணங்கள் முப்பாழ் என்று
இயம்பப்படுகின்றன. முப்பாழுக்கு அப்பால் இருக்கின்ற பரம்பொருளை
அடைந்தாகவேண்டும். யோகத்தில் நிலைபெற்றிருப்பதே அதற்கு உற்ற உபாயம். யோக
சாதனமும் ஈண்டு இயம்பப்படுகிறது. லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி, சுகம்
துக்கம் ஆகியவைகளுக்கு துவந்த்வம் அல்லது இருமைகள் என்று பெயர். இவைகளில்
கட்டுண்டு மனது ஊசலாடாது நடுவு நிலையிலேயே அமைதியுற்றிருக்க வேண்டும்.
அப்படிச் செய்வதே யோக சாதனமாகிறது. இனி யோகம் என்பதற்குச் சாமான்யமான
பொருள் ஒன்று உண்டு. அதாவது பிரபஞ்சப் பொருள்களைத் தேடித்திரிதலுக்கு உலக
வழக்கத்தில் யோகம் என்றும், அவைகளைக் காப்பாற்றி வைப்பதற்கு ÷க்ஷமம்
என்றும் பெயர். அப்படி யோக÷க்ஷமத்திலும் மிகைபட்ட கருத்து வைக்கலாகாது.
சுவாசிப்பதற்குக் காற்றுத்தானாக வந்தமைவதுபோன்று சரீரம் இருக்குமளவும்
அதற்குத் தேவையானவைகள் ஈசுவரானுக்கிரகத்தால் ஆத்ம சாதகன் ஒருவனுக்குத்
தாமாக வந்தமையும். முறை வழுவாத இக்கோட்பாட்டில் விசுவாசம் வைக்காதவர்களே
யோக ÷க்ஷமத்தைப் பற்றி யெண்ணி மனங்கலங்குகின்றனர். அப்படி மனங்கலங்காது
யாண்டும் ஆத்ம சொரூபத்திலேயே சாதகன் திளைத்திருக்க வேண்டும். எந்த யோகிக்கு
இது சாத்தியமாகிறதோ அவன் முப்பாழைக் கடக்க வல்லவனாகிறான். திரிபுர தகனம்
என்பது இதுவே.
இவ் வையகத்தில் வேண்டியதை வேண்டியாங்கு வருவித்துக்கொள்ளலாம். அப்படி
அவைகளைப் பெற்று இன்புற்றிராது முக்குணங்களைக் கடந்து செல்வதால் வரும்
நன்மை யாது? விடை வருகிறது :
46. யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:
ஸர்வத: ஸம்ப்லுத உதகே-எங்கும் நீர் நிரம்பிய இடத்தில், யாவாந் அர்த
உதபாநே-ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது, ஸர்வேஷு வேதேஷு-எல்லா
வேதன்களினாலும், விஜாநத: ப்ராஹ்மணஸ்ய-ஞானமுடைய பிராமணனுக்கு,
தாவாந்-அவ்வளவு தான் (பயன்).
பொருள் :எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது; அன்னபொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.
நீர் இல்லாத இடங்களில் கிணறு நிச்சயமாகப் பயன்படுகிறது. எங்கும்
தெளிநீர் மயமாயிருக்குமிடத்தில் கிணற்றைத் தேடுவார் யாருமிலர். அதுபோன்று
அக்ஞானத்தில் இருக்குமளவு வேதங்களால் பயனுண்டு. அவைகள் காட்டுகின்ற
நெறிகளைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் பலவிதமான இன்பங்களைப் பெற்று
இனிது வாழ்ந்திருக்கலாம். ஆனால் பிரம்ம ஞானமோ பேரின்ப சொரூபமானது. அதன்
கிரணங்களாக வந்தவைகளே ஏனைய இன்பங்கள் யாவும். கனவில் உண்ட உணவு உடலை
வளர்ப்பதில்லை. நனவில் உண்ட உணவு நனவு, கனவு ஆகிய இரண்டிலும் உடலை
வளர்க்கிறது. அப்படிப் பிரம்ம ஞானம் என்ற பேரானந்தத்தில் எல்லா
ஆனந்தங்களும் அடங்கப் பெற்றிருக்கின்றன.
கிணறு மட்டும் அமையப்பெற்றுள்ள ஊரில் இருக்கும் ஒருவன் கிணற்று நீரை
உண்டு திருப்தியடைந்தாகவேண்டும். அங்ஙனம் அக்ஞானத்தில் இருக்கும் பரியந்தம்
ஒருவன் உலக இன்பங்களைத் துய்த்திருப்பதுதானே அவன் கடமை? அப்படியல்ல.
ஞானத்துக்குத் தன்னைப் பக்குவப்படுத்துதற்கு வழியொன்று உண்டு. அதாவது :
47. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி
தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு, கதாசந மா
பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை, கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக்
கோருபவனாக ஆகாதே, தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல், ஸங்க: மா
அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது.
பொருள் : தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில்
எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில்
செய்யாமலுமிராதே.
வாழ்க்கையில் இது ஒரு பெரிய முரண்பாடாகத் தென்படுகிறது. வினைப்பயனை
விரும்பாது யாரும் வினையாற்ற முடியாது. வினைப்பயனை விரும்பாதார் வினையாற்ற
வேண்டிய அவசியமில்லை. ஆனால் பகவானோ இதற்கு நேர் மாறாக உபதேசிக்கிறார்.
கருமம் புரியாது வெறுமனே இருக்கவேண்டாம். ஓயாது பெரு வினையாற்றிக்கொண்டிரு.
வினையினின்று விளையும் பயன் யாது என்ற ஏக்கம் உனக்கு வேண்டாம். அத்தகைய
பற்றற்ற பாங்கினின்றுதான் நன்மை விளையும். ஏனென்றால் கருமம் தன்னளவில்
கொடியதன்று. ஆசையோடு கூடிய கருமமே கொடியது. பிறவிப் பெருங்கடலில் அது
மனிதனை ஆழ்த்துகிறது. சுவர்க்காதி போகங்களை விரும்பி
வினையாற்றியவர்களெல்லாம் ஆசைக்கு அடிமைப்பட்டவர்களே. வினைப்பயனை
விரும்பாதவர்களெல்லாம் ஆசையை வென்றவர்கள். ஆசையை வெல்லுமளவு மனிதன்
சுதந்திரத்தில் நிலைபெறுகிறான். பயன் கருதாது பணிசெய்பவனுக்குச் சித்தம்
தெளிவடைகிறது. ஞானத்தைப் பெற அவன் தகுதியுடையவன் ஆகிறான். ஆற்றலும்
அவனுக்கு அதிகரிக்கிறது. ஆக, கருமம் நடைபெறவேண்டும். கரும பலனில் ஆசை
வைக்கலாகாது. ஆசையை வென்றவன் நிஷ்காமிய கருமம் செய்யும் விதம் வருமாறு:
48. யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே
தநஞ்ஜய-அர்ஜுனா! யோகஸ்த:-யோகத்தில் நின்று, ஸங்கம் த்யக்த்வா-பற்றை
நீக்கி, ஸித்தி அஸித்தயோ: ஸமோ பூத்வா-வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு,
கர்மாணி குரு-தொழில்களைச் செய்க, ஸமத்வம் யோக உச்யதே-நடுநிலையே
யோகமெனப்படும்.
பொருள் : தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.
தான் செய்யும் வினையெல்லாம் ஈசுவரனுடையது என்கிற எண்ணத்தில்
நிலைத்திருப்பது யோகத்தில் நிலைத்திருப்பதாகிறது. செயலெல்லாம் அவனுடையது
என்று எண்ணுவதால் பற்றுதல் போய்விடுகிறது. ஈசுவரனுடைய வேலைக்காரனாகத் தன்னை
வைத்துக்கொண்டு யோகி வினையாற்றுகிறான். பக்கத்து ஊரிலிருக்கும் ஒருவனை
அழைத்து வரும்படி வேலைக்காரனை எஜமானன் ஏவுகிறான். வேலைக்காரன் அங்குச்
சென்று அம்மனிதன் அவ்வூரில் அப்பொழுது இல்லையென்று அறிகிறான். அங்ஙனம் தன்
யத்தனத்தில் நேர்ந்த தோல்வியை முன்னிட்டு அவன் வருந்துவதில்லை. மற்றொரு
நாள் சென்று அம்மனிதனைக் காண்கிறான். அவ்வெற்றியால் அவன் தனி மகிழ்ச்சி
யடைவதில்லை. தலைவன் தூண்டுதல்படி தன் கடனாற்றுவதே அவ்வேலைக்காரனுக்குப்
போதுமானது. கருமயோகியும் அவ்வாறு வெற்றி தோல்விகளை ஒப்பாய் உணர்கிறான்.
தராசுமுள் போன்று மனது நடுவுநிலையில் இருப்பதற்கு யோகம் என்று பெயர்.
மனது நடுவுநிலையில் உறுதி பெறுமளவு அது மேன்மையுறுகிறது. ஓரம் சாரேல்
என்பது கோட்பாடு. மனது இப்பக்கம் அப்பக்கம் சாராது இருத்தல் வேண்டும்.
இனியதைப் பெறுகிற வேளையில் இன்புறவும், இன்னாததைப் பெறுகிற வேளையில்
துன்புறவும் செய்கிறது மனது. இவ்விரண்டும் ஓரம் சார்ந்த நிலைகளாகும். இன்ப
துன்பமிரண்டையும் ஒரே பாங்கில் பொருள்படுத்துவது நடுவுநிலை. அதனால்
மனத்தகத்துத் தெளிவும், உறுதியும் உண்டாகின்றன. தெளிந்து அசையாதிருக்கும்
நீரில் பிம்பம் நன்கு புலப்படுகிறது. தெளிந்து உறுதி பெற்றுள்ள உள்ளத்தில்
மெய்ப்பொருள் காட்சி நன்கு புலனாகும். அது நடுவு நிலையினின்று மனது பெறும்
மேன்மையாம். எத்தகைய வாழ்க்கை அல்லது மனநிலை ஒவ்வாது என்பது இனி
இயம்பப்படுகிறது :
49. தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய
புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:
தநஞ்ஜய-தனஞ்ஜயா! புத்தியோகாத் கர்ம-புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம்,
தூரேண அவரம்-நெடுந்தொலைவு தாழ்ந்தது, புத்தௌ ஸரணம் அந்விச்ச-புத்தியைச்
சரணடை
பலஹேதவ: க்ருபணா:-பயனைக் கருதுவோர் லோபிகள்.
பொருள் : தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.
இருப்புப்பாதை வண்டியில் பிரயாணம் செய்த ஒருவனுக்கு ஏவலாளன் ஒருவன்
கூலிக்காக மூட்டை சுமந்தான். வழிப் போக்கனாக வந்த வேறு ஒரு பிரயாணி
அன்பினால் தூண்டப் பெற்று சமபுத்தியுடன் மூட்டை சுமந்து அவனுக்கு உதவி
புரிந்தான். இருவர் செயலும் ஒன்றே யெனினும் கூலிக்காகச் சுமந்தவன்
கீழ்மகன். போதியவளவு கூலி கிடைக்கவில்லை யென்ற மனக்குறை அவனுக்கு வந்து
அமைகிறது. தன்னைக் குறித்து அவன் தானே பரிதாபப் படுவதுமுண்டு. ஆகவே அவன்
கிருபணன். அர்ஜுனன் தன்னைக் கிருபணன் என்று இயம்பிக்கொண்டதை ஈண்டு
ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வுலகில் கரும பலனை நாடும்
பெரும்பான்மையோர் கூலிக்காரன் போன்று அலைந்து திரிந்து அழிகின்றனர்.
வேற்றானாயிருந்தும் அன்புக்காக மூட்டை சுமந்தவனே மேன்மகன். கொடையாளி போன்று
செயல்புரிபவன் மேன்மையுறுகிறான். நீரை இறைக்க இறைக்க அது மேலும் கிணற்றில்
ஊறுவது போன்று சுயநலம் கருதாத சேவையானது ஆற்றலை வளர்க்கிறது. மனதின் சம
நிலைக்கு அந்த ஆற்றல் யாண்டும் உற்ற துணையாகிறது. சமநிலையினின்று ஞானசமாதி
இனிது வடிவெடுக்கிறது.
மனதின் சமநிலை இவ்வுலக வாழ்க்கைக்கு எப்படித் துணை புரிகிறது என்னும் கேள்வி எழுகிறது. அதற்குப் பகவான் விடையளிக்கிறார்.
50. புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஸலம்
புத்தியுக்த:-புத்தியுடையவன், ஸுக்ருத துஷ்க்ருதே-நற்செய்கை தீச்செய்கை,
உபே இஹ ஜஹாதி-இரண்டையும் இங்கு துறக்கிறான், தஸ்மாத் யோகாய
யுஜ்யஸ்வ-ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு, யோக: கர்மஸு கௌஸலம்-யோகம்
செயல்களில் திறமையாம் (விடுபட உபாயமாகும்).
பொருள் : புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந்
துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில்
திறமையாம்.
மனிதனை அக்ஞான இருளில் சேர்க்கும் இயல்புடையவைகள் இருவினையும். ஆனால்
கருமயோகியை வினைகள் தளைக்கமாட்டா. அவனுக்கு சுயநல எண்ணம் சிறிதுமில்லாமையே
அதற்குக் காரணம். இரண வைத்தியன் ஒருவன் நோயாளியின் உடலை அறுக்கிறான்.
நோயாளி உயிர் பிழைப்பதால் வைத்தியனுக்குப் புண்ணியம் இல்லை. அவன் சாவதால்
வைத்தியனுக்குப் பாபம் இல்லை. நடுவு நின்று முறையாகத் தன் கடமையை
அவ்வைத்தியன் புரிகிறான். நோயாளியைக் கொல்லவேண்டும் என்ற கெட்ட எண்ணம்
அவனுக்கு இல்லை. ஈசுவர சங்கற்பத்தை மீறி நோயாளியைக் காப்பாற்ற முடியும்
என்ற அகங்காரமும் அவனிடத்தில்லை. ஆதலால் இருவினையும் அவனைச் சேர்வதில்லை.
இரண வைத்தியன் பல உடல்களை அங்ஙனம் அறுத்துச் சிகிச்சை செய்கிறான்.
பின்பு ஒரு நோயாளியைப் பார்த்து இவன் என் புதல்வன் என்று அவன் பற்று
வைத்தால் அவனது நடுவு நிலை கலைந்து போகிறது. முறையாக இரண வைத்தியம் செய்ய
அவனுக்கு இயலுவதில்லை. எல்லாக் கருமங்களுக்கும் இதுவே விதி. எல்லாத்
தொழில்களிலும் மனது நடுவு நிற்பது யோகம். மனமானது நடுவுநிற்கின்றவளவு
கருமம் திறம்படச் செய்யப்படுகிறது. விருப்பு அல்லது
வெறுப்புக்கொள்ளுமிடத்துத் திறமை குறைந்துபோகிறது. யுத்தம் புரிதல் போன்ற
ஒரு கோர கர்மத்தையும் நடுவு நின்று திறமையாகச் செய்துகாட்டினார் பீஷ்மர்.
கணவனுக்குப் பணிவிடை செய்த மாது ஒருத்தி திறம்படத் தன் கடமையைச்
செய்ததினால் காட்டில் தவம்புரிந்து கொக்கை எரித்த தவசியைவிட மேலானவள்
ஆயினாள். பற்றற்றுத் திறம்படக் கசாப்புக்கடை வைத்திருந்த வியாதன் அதே
தவசிக்கு ஞானம் புகட்டவல்ல பரிபாகம் அடைந்தான். நடுவு நிற்பதால் புதிய
வினைத்தளைகள் உண்டாவதில்லை; பழைய கட்டுகள் தாமே அவிழ்கின்றன. அதனால்
மனபரிபாகம் உண்டாகிறது.
திறம்படச் செய்யும் வினைகளுள் தலைசிறந்த வினை யாது என்ற கேள்வி எழுவதால் விடை வருகிறது.
51. கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்
ஹி புத்தியுக்தா மநீஷிண:-ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள், பலம்
த்யக்த்வா-பயனைத் துறந்து, ஜந்மபந்தவிநிர்முக்தா:-பிறவித் தளை நீக்கி,
அநாமயம் பதம் கச்சந்தி-மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.
பொருள் : புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.
துன்பத்துக்கு ஏதுவான இவ்வுலக வாழ்க்கையைத் துன்பமற்றதாக யோகி
செய்துகொள்கிறான். பிறவிக்கு வித்தாயிருப்பதைப் பின்பற்ற பெருநிலையாகவும்
அவன் செய்துகொள்கிறான். கேட்டைக் கேடின்மையாகச் செய்வதே வல்லமையில் பெரு
வல்லமையாம். தம்மை விழுங்கவந்த விஷத்தை யெடுத்து அமிர்தமாகப் பானம்
பண்ணுகிறார் சிவபெருமான். விஷ வைத்தியர்களுள் அவர் தலைசிறந்த வைத்தீசுவரன்.
மனிதனைக் கட்ட வந்த கருமத்தை யெடுத்துக் கருமயோகி முக்தி மார்க்கமாக
மாற்றிக்கொள்கிறான். அப்படிச் செய்யும் செயலே செயற்கரிய செயலாகிறது.
பெருநிலையடைந்ததன் அறிகுறி பின் வருகிறது.
52. யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச
யதா தே புத்தி-எப்போது உனது புத்தி, மோஹகலிலம்-மோகக் குழப்பத்தை,
வ்யதிதரிஷ்யதி-கடந்து செல்லுகிறதோ, ததா-அப்போது, ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய
ச-கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும், நிர்வேதம்
கந்தாஸி-வேதனையேற்படாது.
பொருள் : உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது
கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.
ஆத்மா, அனாத்மா இவ்விரண்டுக்கும் வேற்றுமை விளங்காத நிலை அவிவேகமாகும்.
விவேகம் உதயமானதும் உண்மை விளங்குகிறது. கனவைக் கனவு என்று
தெரிந்துகொண்டவனுக்குக் கேள்விப்பட்ட கனவும், இனிக் கேட்கப்போம் கனவும்
ஆகிய இரண்டும் பொருள்படாதவைகளாம். அங்ஙனம் உலக நடைமுறையின் உண்மையை
அறிந்துகொண்டவனது உள்ளத்தில் அதைப்பற்றிய செய்திகள் எந்தவிதமான
தடுமாற்றத்தையும் உண்டுபண்ணுவதில்லை.
தனக்கு அத்தகைய பெருநிலை எப்பொழுது வரும் என்று ஒரு சாதகன் கேட்கிறான். அதற்கு விடை வருகிறது.
53. ஸ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி
ஸ்ருதிவிப்ரதிபந்நா-கேள்வியிலே கலக்கமுறாததாய், தே புத்தி-உனது புத்தி,
மாதௌ-சமாதி நிலையில், நிஸ்சலா அசலா-உறுதிகொண்டு, அசையாது, யதா
ஸ்தாஸ்யதி-நிற்குமாயின், ததா யோகம் அவாப்ஸ்யஸி-அப்போது யோகத்தை அடைவாய்.
பொருள் : உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில் அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.
தான் அனுபவியாத ஒரு பொருளைப்பற்றி பிறர் சொல்லுவதையெல்லாம் கேட்டுக்
குழப்பமடைவது மனதின் இயல்பு. நான் உயிரோடு இருக்கிறேனா, அல்லது இறந்து
ஒழிந்துபோய் விட்டேனா? என்று தன்னைப்பற்றி யாரும் பிறரிடம் கேட்பதில்லை.
தான் உயிர் வாழ்வது தனக்குப் பிரத்தியக்ஷம். அதற்கு வேறு பிரமாணம் ஒன்றும்
வேண்டியதில்லை. மனது ஒடுங்கி ஆத்ம சொரூபத்தில் நிலைத்திருக்குங்கால் அது
சமாதி என்று சொல்லப்படுகிறது. அப்பொழுது ஆத்ம சொரூபத்தின் பெருமையை அதுவே
சொல்லும். அந்நிலையில் ஆத்ம ஞானமும் யோகமும் பூர்த்தியாகின்றன. மனிதன் அடைய
வேண்டிய பெருநிலையைப் பெற்றவனாகிறான்.
ஈண்டு வினா ஒன்று கேட்பதற்கு அர்ஜுனனுக்கு அவகாசம் ஏற்படுகிறது. ஆக, அவன் அதைப் பகவான் முன்னிலையில் சமர்ப்பிக்கிறான்.
அர்ஜுந உவாச
54. ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், கேஸவ-கேசவா! ஸமாதிஸ்தஸ்ய
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா-உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு
பேசுவான்?
ஸ்திததீ:-ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? கிம் ப்ரபாஷேத-என்ன சொல்வான்?
கிம் ஆஸீத-எப்படியிருப்பான்? கிம் வ்ரஜேத-எதனையடைவான்?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில்
நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்?
எப்படியிருப்பான்? எதனையடைவான்?
ஸமாதி கூடியவன், பிரம்மஞானி, ஸ்திதப்பிரக்ஞன் ஆகிய இச்சொற்களெல்லாம் ஒரே
கருத்தை விளக்குகின்றன. பரிபூரணமுணர்ந்த ஞானி தானே பரிபூரணமாகிறான்.
அத்தகையவன் சமாதியில் இருக்கும்போது அவனுடைய அந்தக்கரணம் எத்தன்மையதாகிறது?
பகிர்முகமாக அவன் மனதைத் திருப்பும் போது அவனுடைய செயல்கள்
எப்படிப்பட்டவைகளாயிருக்கும்?
இந்த அத்தியாயத்தின் இறுதிவரையில் இனி வரும் பதினெட்டு சுலோகங்களில்
நிறைஞானியின் இயல் இயம்பப்படுகிறது. நல்ல எழுத்து எழுத விரும்புபவர் மாதிரி
எழுத்தைத் தங்கள் முன்னிலையில் வைத்துக்கொள்கின்றனர். சிறந்த சித்திரம்
வரைய விரும்பும் ஓவியக்காரன் அழகிய படம் ஒன்றைத் தன்முன்பு மாதிரியாக
வைத்துக்கொள்கிறான். பரிபூரணத் தன்மையை முன்மாதிரியாக வைத்துக்கொள்ளுதல்
ஒவ்வொரு துறையிலும் இடம்பெறுகிறது. ஆத்மீகத் துறையிலும் இம்முறை
பொருந்தும். சான்றோர்க்கு சாத்தியமாகக்கூடிய சம்பூரண நிலை ஈண்டுச்
சாற்றப்படுகிறது. அந்நிலையை அடைய முயல்வார் தம் சாதனத்தில் செய்யவேண்டியது
யாது என்பதும் இதில் அடங்கப்பெறுகிறது. ஆக, இப்பெருநிலையைக் குறிக்கோளாக
வைத்துக்கொண்டு இதன் பொருட்டுப் பாடுபடுவதெல்லாம் யோக சாதனங்களாகின்றன.
குறியும் நெறியும் அடங்கப்பெற்ற சிறந்த பதினெட்டு சுலோகங்களும் வருகிறது.
ஸ்ரீ பகவாநுவாச
55. ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே
ஸ்ரீ பகவாநுவாச- ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த-அர்ஜுனா! மநோகதாந்
ஸர்வாந் காமாந்-மனதில் எழும் விருப்பங்களனைத்தையும், ப்ரஜஹாதி-துறக்கிறான்,
யதா ஆத்மநா ஆத்மநி ஏவ துஷ்ட:-தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், ததா
ஸ்திதப்ரஜ்ஞ: உச்யதே-அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒருவன் தன் மனதில் எழும்
விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின்,
அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.
அர்ஜுனனுடைய கேள்வியில் முதல் பகுதிக்கு இது விடை:
அக்கினி தானே உஷ்ண சொரூபம். வெப்பத்தை நாடி அது வேறு பொருளிடத்துப்
போகவேண்டியதில்லை. அங்ஙனம் ஆத்மா ஆனந்த சொரூபம். தன்னிடத்துள்ள ஆனந்தத்தை
அது பிறபொருள்மீது ஏற்றுவித்து, மனதைக் கொண்டு அவைகளை நாடிச் செல்லுகிறது.
அத்தகைய நாட்டத்துக்குக் காமம் என்று பெயர். நீரில் அலை உண்டாவதுபோன்று
காமம் மனதில் வடிவெடுக்கிறது. அலைகள் வீசும்பொழுது நீரின் அடிப்பாகம்
தென்படுவதில்லை. மனதில் காம அலைகள் வீசும்பொழுது அதற்கு அடிப்படையாயுள்ள
ஆத்மாவின் ஆனந்தசொரூபம் சிதறடைந்தது போன்று ஆகிறது. காம அலைகளற்று மனது
தேங்கியிருக்கும் போது ஆத்மாவின் ஆனந்த சொரூபம் தனக்குத் தானே
விளங்குகிறது. தான் உலகெல்லாம் தேடிய இன்பம் தன்னிடத்தே யாண்டும்
இருக்கிறது என்று மனம் தெளிபவனே நிறைஞானி. ஆத்ம திருப்தன் நிறைஞானி.
மனம் தெளிந்திருத்தல் என்பதன் விளக்கம் வருகிறது :
56. து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே
து:கேஷு அநுத்விக்நமநா:-துன்பங்களிலே மனங்கொடாதவனாய், ஸுகேஷு
விகதஸ்ப்ருஹ:-இன்பங் களிலே ஆவலற்ற வனாய், வீதராகபயக்ரோத:-அச்சமும் சினமுந்
தவிர்த்தவன்
முநி ஸ்திததீ உச்யதே-அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.
பொருள் : துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய்,
அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ
னென்ப.”
துன்பத்துக்கு ஏதுவான நிகழ்ச்சிகள் இவ்வுலகில் நிறைந்திருக்கின்றன.
தெளிந்த மனமுடையவனை அவைகள் அசைத்துத் துன்படுத்தமாட்டா. விறகுக்கட்டை சேரச்
சேரத் தீ வளர்கிறது. திடஞானியினிடத்து ஆசை அப்படி வளர்வதில்லை. சுகத்தைத்
தரும் பொருள்கள் பெருகினாலும் அவன் அவைகளிடத்து நாட்டம் கொள்வான். பற்று,
அச்சம், சினம் என்னும் மூன்று விதக் குற்றங்களினின்று நீங்கி அவனது மனம்
நிறை நிலையடைகிறது. உலகப் பொருள்களிடத்துப் பற்றற்றிருக்கவேண்டும்.
பாம்பினிடத்தும் மரணத்தினிடத்தும் நமக்குப் பற்று இல்லை. ஆனால் அவைகளைக்
குறித்துப் பயம் உண்டு. அது ஒண்ணாது. பற்றற்றிருப்பது போன்று பயமற்றும்
இருக்கவேண்டும். பீமன் போன்றவனுக்குப் பகைவனிடத்துப் பற்றுமில்லை, பயமும்
இல்லை. எனினும் பெருமிதமாகக் கோபம் இருந்தது. அதும் தகாது. பற்றற்று,
பயமற்று, சினமற்றிருக்கும் மனதே சீரிய மனதாகிறது. தெளிவடைதலும் அத்தகைய
மனதுக்குச் சாத்தியமாகிறது. இன்ப துன்பங்களை நிகராக நினைப்பவன் நிறைஞானி.
விருப்பும், வெறுப்பும், அச்சமும் அற்றிருப்பவன் நிறைஞானி. மனன
சீலத்தையுடையவன் முனி. அதாவது ஸதலதாரை போன்று யாருடைய மனது இடையறாது ஆத்ம
சொரூபத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறதோ அம்மனிதன் முனியாகிறான்.
புறவுலகோடு முனிவன் எவ்வித இணக்கம் வைக்கிறான் என்னும் வினாவுக்கு விடை வருகிறது.
57. ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸுபாஸுபம்
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
ய:-எவன், ஸுப அஸுபம்-நல்லதும் கெட்டதும், ப்ராப்ய-அடைந்து, ந அபிநந்,
ததி -மகிழ்வதில்லை, ந த்வேஷ்டி-வெறுப்பதும் இல்லை, ஸர்வத்ர
அநபிஸ்நேஹ-பகைப்பதுமின்றியிருப்பானோ, தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய
அறிவே நிலைகொண்டது.
பொருள் : எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும்
வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றியிருப்பானோ, அவனுடைய அறிவே
நிலைகொண்டது.
நலமும் கேடும் கலந்துள்ளது உலகம். பற்றுடையார்க்கு அது இன்ப துன்பங்களை
விளைவிக்கிறது. பற்றற்ற ஞானிக்கு அதனால் இன்ப துன்பங்கள் உண்டாவதில்லை.
ஆகையால் அவன் புகழ்வதுமில்லை, இகழ்வதுமில்லை.
எப்படிப் பேசுகிறான் என்று கேட்ட கேள்விக்கு இது விடையாகிறது:
58. யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்காநீவ ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
கூர்ம ஸர்வஸ: ச-ஆமை தன் அவயங்களையும், ஸம்ஹரதே இவ-இழுத்துக்கொள்ளுவது
போல், அர்தேப்ய இந்த்ரிய-விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை, யதா
அயம்-எப்போது இந்த மனிதன் (இழுத்துக் கொள்ள வல்லானாயின்) தஸ்ய ப்ரஜ்ஞா
ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.
பொருள் : ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும்
விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே
நிலைகொண்டது.
ஆபத்துக்களினின்று தன்னைக் காத்துக்கொள்ள ஆமை மிக எளிதில் உறுப்புக்களை
உள்ளே இழுத்துக்கொள்கிறது. அவ்வளவு எளிதில் இந்திரியங்களை ஆளும் அறிஞன்
இந்திரியங்களை உன்முகமாகத் திருப்புகிறான். இப்படிச் செய்வது
பிரத்தியாகாரம் எனப்படுகிறது. வீட்டின் கதவுகளைத் தாழ் இட்டு அடைத்து
வெளியுலகின் வியவகாரத்தில் தொடர்வு அற்றவனாக மனிதன் உள்ளே வீற்றிருப்பது
போன்று ஞானி பொறி வாயிலை அடைத்துவைத்துச் சமாதியில் சுகித்திருக்க
வல்லவனாகிறான். அப்படிச் சமாதியில் திளைத்திருப்பதுதான் நிறைஞானியின் உண்மை
நிலை. நிலத்தில் திண்டாடுகிற மீனை நீரில் விட்டால் அது எப்படி உணர்கிறதோ
அப்படியிருக்கிறது ஞானிக்கு ஆத்ம சொரூபத்தில் இருப்பது. பூரணப் புலனடக்கம்
நிறைஞானிக்கு முற்றிலும் இயல்பானது.
ஸ்திதப்பிரக்ஞன் எங்ஙனம் அமர்கிறான் என்று அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு விடையாக அடுத்த மூன்று ஸ்லோகங்கள் வருகிறது.
59. விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே
நிராஹாரஸ்ய தேஹிந:-கவராத ஜீவனிடமிருந்து, விஷயா விநிவர்தந்தே-விஷயங்கள்
தாமே விலகிக் கொள்ளுகின்றன, ரஸவர்ஜம்-(எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை
மறப்பதில்லை, அஸ்ய பரம் த்ருஷ்ட்வா-இவன் பரம்பொருளைக் கண்டதும், ரஸ: அபி
நிவர்ததே-அச்சுவையுந் தீர்ந்துவிடும்.
பொருள் : தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக்
கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக்
காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.
நோய்வாய்ப்பட்டிருப்பவனுடைய இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களில்
செல்லத் தகுதியற்றவைகளாகின்றன. ஆயினும் சுகமடைந்ததும் விஷயங்களை அனுபவிக்க
வேண்டும் என்ற விருப்பம் உள்ளத்தில் குடிகொண்டிருக்கிறது. சிறைச்சாலையில்
அடைபட்டிருப்பவனுக்கும் இந்திரியார்த்தங்களை நுகர இயலாது.
விஷயங்களையெல்லாம் விட்டு அவன் பலவந்தமாக விலக்கப்பட்டவனாகிறான். ஆனால்
அவைகளை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் உதித்துக்கொண்டிருக்கிறது.
யாராலும் அதை அடக்கிவைக்க முடியாது. புலனடக்கம் முதலிய தபசுகளைச் செய்பவனது
நிலைமையும் அத்தகையது. வாசனைகள் மிக சூக்ஷ்மமாக இருந்துகொண்டு கூத்தாடும்.
தீயிலிட்டு வறுத்த விதை முளைக்காது. அவ்வாறு வாசனை அறவே ஒழியவேண்டும்.
இந்த ஆசையை பகவான் ரஸம் என்கிறார். வாசனை, ரஸம், ஆசை ஆகிய சொற்களுக்குப்
பொருள் ஒன்றேயாம். ஆசையானது திரும்பவும் முளைக்காதபடி அவிந்துபட்டுப்
போகவேண்டும்.
ஆசையை வேர் அறுப்பதற்கு வழியொன்று உண்டு. சிற்றின்பத்துக்கு ஏதுவான
பொருள்களாகத் தென்படுபவைகளெல்லாம் உண்மையில் பரமாத்மாவே என்று அறிபவர்கள்
அதன் கண் அசையோ அல்லது பயமோ கொள்ளமாட்டார்கள். அதைப் போற்றிப்
பாராட்டுவார்கள்.
அடங்காத இந்திரியங்கள் செய்யும் இன்னல்கள்:
60. யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:
கௌந்தேய-குந்தியின் மகனே, ஹி-ஆனால், யதத: விபஸ்சித:-முயற்சியுள்ள புத்திசாலியான
புருஷஸ்ய மந: அபி-புருஷனின் மனதிலே கூட, ப்ரமாதீநி இந்த்ரியாணி-கலக்குபவையான இந்திரியங்கள், ப்ரஸபம் ஹரந்தி-வலிய வாரிச் செல்கின்றன.
பொருள் : குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட,
இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும்போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச்
செல்கின்றன.
இந்திரியங்கள் பொல்லாதவைகள். தவ விரதமுடையவர்களையும் அவைகள் தத்தளிக்கச்
செய்கின்றன. அவைகளைப் பின்பற்றுவது காட்டுக் குதிரையின் மீது சவாரி
செய்வதற்கு ஒப்பாகும். அறிஞர்களையே அவைகள் படுகுழியில் வீழ்த்துபவைகள்.
பின்பு, பாமரர்களை அவைகள் என் செய்யமாட்டா? இந்திரியங்களை வெல்லுமளவு
மனிதன் மேலோன் ஆகிறான். தனி மனிதன் அல்லது ஒரு சமுதாயம் அடைந்துள்ள
பண்பாட்டை ஆங்குத் தென்படும் புலனடக்கத்தைக்கொண்டு அளந்துவிடலாம். சீரிய
புலனடக்கமே மேலான நாகரிகம் என்று கருதப்படுகிறது. இம்மை மறுமையாகிய
இரண்டிலும் மேன்மைக்கு இந்திரிய நிக்கிரகமே உற்ற உபாயம்.
அவ்விந்திரியங்களை அடக்கும் வழி:
61. தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
தாநி ஸர்வாணி ஸம்யம்ய-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, மத்பர:-என்னைப்
பரமாகக் கொண்டு, யுக்த ஆஸீத-யோகத்தில் அமர்ந்தவனாய், யஸ்ய இந்த்ரியாணி
வஸே-எவன் புலன்களை வசப்படுத்தியிருக்கிறானோ, தஸ்ய ப்ரஜ்ஞா
ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.
பொருள் : அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய்,
என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ,
அவனுடைய அறிவே நிலைகொண்டது.
மனது ஏககாலத்தில் இரண்டு பொருள்களை நினைக்க முடியாது. நான் விஷயங்களை
விட்டுவிடவேண்டும் என்று நினைக்கும்போதும் விஷய எண்ணங்கள் தான் மனதில்
குடிகொள்கின்றன. வேர் ஊன்றி மனதுக்குள் பாய்ந்து மறைமுகமாக அவைகள் வலிவு
பெறுகின்றன. விஷய எண்ணங்களுக்கு மனமுவந்து அனுமதி கொடுக்கிறபொழுது அவைகள்
மேலே கிளைகளாகத் தளிர்க்கின்றன. வேண்டாமென்று அக்கிளைகளைக் கொய்ய
முயலும்போது அவைகளின் ஆணிவேர் மனதினுள் ஆழமாகச் செல்லுகிறது. அதற்குப்
பதிலாக எண்ணத்தையே மாற்றியமைக்க வேண்டும். இந்திரியங்களைப் பற்றிய எண்ணம்
ஈசனைப் பற்றிய எண்ணமாக மாறவேண்டும். இவ்விரண்டு எண்ணங்களுள் எது வலுக்கிறதோ
அது மற்றதைத் தகர்க்கிறது. தீயதைத் தகர்க்கும் தன்மை தெய்விக எண்ணத்துக்கு
உண்டு. பக்தி ஓங்குமளவு இந்திரியங்களின் வேகம் தணிகிறது.
கேடு அனைத்துக்கும் முதற்காரணம் யாது? விடை வருகிறது:
62. த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே
ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோऽபிஜாயதே
பும்ஸ: விஷயாத் த்யாயத-மனிதன் விஷயங்களைக் கருதும் போது, தேஷூ ஸங்க:
உபஜாயதே-அவற்றில் பற்றுதலுண்டாகிறது, ஸங்காத் காம: ஸஞ்ஜாயதே-பற்றுதலால்
விருப்பமுண்டாகிறது, காமாத் க்ரோத: அபிஜாயதே-விருப்பத்தால் சினம்
பிறக்கிறது.
பொருள் : மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது.
பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
63. க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாஸோ புத்திநாஸாத்ப்ரணஸ்யதி
க்ரோதாத் ஸம்மோஹ: பவதி-சினத்தால் மயக்கம் உண்டாகிறது, ஸம்மோஹாத்
ஸ்ம்ருதி விப்ரம:-மயக்கத்தால் நினைவு தவறுதல், ஸ்ம்ருதிப்ரம்ஸாத் புத்தி
நாச நினைவு தவறுதலால் புத்தி நாசம், புத்திநாஸாத் ப்ரணஸ்யதி-புத்தி
நாசத்தால் அழிகிறான்.
பொருள் : சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்.
இந்திரியங்களை விஷயங்களில் உலவவிட்டுக் கொண்டு மனிதன் ஒருவன் வீதியில்
நடக்கிறான். பல வடிவங்களை அவன் பார்க்கிறான். கண்ணாடியில் பிம்பம் போன்று
அவைகள் தோன்றித் தோன்றி மறைகின்றன. மனதில் ஒரு பதிவையும் அவைகள்
செய்வதில்லை. அவைகளுக்கிடையில் கட்டழகுள்ள வடிவம் ஒன்று தோன்றுகிறது. அதைக்
கூர்ந்து பார்க்க மனது விரும்புகிறது. திரும்பவும் பார்க்கவேண்டும் என்ற
எண்ணம் வருகிறது. பன்முறை பார்க்கும் வாய்ப்பும் அமைகிறது. அதைப்
பார்ப்பதில், பிறகு நினைப்பதில் மகிழ்ச்சி உண்டாகிறது. நினைந்து நினைந்து
அவ்வழகு வடிவத்தின்கண் விருப்பம் வருகிறது. வலுத்த விருப்பம் பற்றுதல் எனப்
பெயர் பெறுகிறது. பார்த்தல் என்கிற ஓர் இந்திரிய நுகர்ச்சி மற்ற இந்திரிய
நுகர்ச்சிகளுக்கும் இடந்தேடப் பார்க்கிறது. அதாவது அச் சுந்தர சொரூபத்தைத்
தனக்குரியதாக்கிக் கொள்ளத் தீர்மானம் செய்யப்படுகிறது. இத்தீர்மானத்துக்கு
ஆசை அல்லது காமம் என்று பெயர். எரியும் தீயை விறகுக்கட்டை வளர்ப்பதுபோன்று
என்ணம் காமத்தை வளர்க்கிறது. இனி, ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கான
முயற்சி எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் உலகம் அதற்கு இடந்தருவதில்லை.
இந்த ஆசையை அவர்கள் தடைப்படுத்துகின்றனர். தடைப்பட்ட ஆசை சினமாக
வடிவெடுக்கிறது. சினத்தைக் காணுமிடத்தெல்லாம் அதைத் துருவி ஆராய்ந்தால் அது
தடைப்பட்ட ஆசை என்பது தெளிவாகும். சினம் பைத்தியத்துக்கு ஒப்பானது.
பைத்தியம் நிலைத்துள்ளது; சினம் தற்காலிகமானது. அவ்வளவுதான் வித்தியாசம்.
சினம் கொண்டவனுக்கும் பித்தம் பிடித்தவனுக்கும் நடைமுறை ஒன்றே. குழம்பிய
மனநிலை அதன் விளைவு.
அமைதி குடிகொள்ளுங்கால் வனத்தில் உள்ள மரம் செடி கொடிகள் உள்ளபடி
தென்படுகின்றன. அவைகளுள் இது இப்பெயருடையது என்கிற நினைவு இருக்கிறது.
ஆனால் புயல் காற்று அடிக்குங்கால் எல்லாம் ஒரே அமளி. சினம் கொண்ட மனதிலும்
ஒரே புயல்காற்று. அது சம்மோகம் என்றும், குழப்பம் என்றும் பெயர் பெறுகிறது.
நன்று இது, தீது இது என்ற நினைவு அப்பொழுது இருப்பதில்லை. பண்டு, பலகால்
ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள நலம் கேடுகளைப் பற்றிய ஞாபகம் போய்விடுகிறது.
பழைய நினைவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு மனிதன் புதிய செயல்களை
நன்றென்றும் தீதென்றும் பாகுபடுத்துகிறான். எப்பொருள் எத்தன்மையது என்கிற
ஞாபகம் இருந்தால்தான் அப்பொருளின் மெய்ம்மையை புத்தியானது பாகுபடுத்த
வல்லதாகும். ஆக, நினைவு போய்விட்டால் விவேகம் அல்லது நல்லறிவு அழிகிறது.
அறிவை இழந்தவன் தானே அழிவுபட்டவன் ஆகிறான். ஏனென்றால் நெறி வழுவுதல்
மாய்தலுக்கு ஒப்பாகிறது.
விஷயாதிகளில் உலவும் எண்ணத்தை மீட்டெடுத்து எதன் கண் நிலை நிறுத்தினால் நன்மையுண்டாகும்? விடை வருகிறது :
64. ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ்சரந்
ஆத்மவஸ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி
விதேயாத்மா-தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் (சாதகன்), ராக த்வேஷ
வியுக்தை: -விழைதலும் பகைத்தலுமின்றி, ஆத்மவஸ்யை இந்த்ரியை:-தனக்கு
வசப்பட்ட புலன்களுடன்
விஷயாந் சரந்-போகத்தில் சஞ்சரித்துக் கொண்டு, ப்ரஸாதம் அதிகச்சதி-உள்ளத் தெளிவை அடைகிறான்.
பொருள் : விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன்
விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.
இந்திரியங்கள் இயல்பாகப் புறவுலகில் செல்லும் பாங்குடையவைகள்.
புறப்பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்ற அவாவுடன் பொறிகள் அவைகளைத் தாவிப்
பற்றுகின்றன. ஆனால் பொருள்கள் துன்பம் தருவனவாயிருப்பின் பொறிகள் அவைகளை
வெறுத்துப் பின்வாங்குகின்றன. இங்ஙனம் விருப்பும் வெறுப்பும்
இந்திரியங்கள்பால் இயல்பாய் அமைந்துள்ளன. அந்த இயல்பை இன்னும் கொஞ்சம்
ஆழ்ந்து ஆராயுமிடத்து மனது ஆட்டிவைக்கின்ற பிரகாரம் இந்திரியங்கள் ராகதுவேஷ
வடிவெடுத்துத் தொழில்புரிகின்றன.
மனதை அடியோடு அடக்கி வென்றவன் மனவேந்தன். அத்தகையவனது மனம் பெரிதும்
ஆத்ம சொரூபத்திலேயே திளைத்திருக்கிறது. அது வெளி விஷயங்களில் செல்லுமாயின்
ஆசைப்படாது புனித இயல்போடு சஞ்சரிக்கிறது. அதனால் அதனுடைய அமைதியும்
தெளிவும் அதிகரிக்கின்றன. சுத்த மனதோடு இந்திரியங்களைப் பயன்படுத்துவதே
ஒருவித சமாதியாகிறது. ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸர் கண்கொண்டு கார்மேகத்தையும்
அதன் கீழ் உலாவிய கொக்கையும் பார்த்தார். அதனால் அவருக்கு ஆனந்த சமாதி
ஏற்பட்டது. அவர் சிறுவராயிருந்தபோது நாடகத்துக்குச் சிவவேஷம்
பூட்டினார்கள். சாம்பல் பூசுதல் முதலிய ஸ்பரிச உணர்ச்சி அவருக்கு சிவ பாவ
சமாதியை உண்டுபண்ணிற்று. காதால் பகவந் நாமத்தைக் கேட்டபொழுதெல்லாம்
அவருக்கு சமாதி வந்தது. நறுமணத்தை நுகர்ந்தபோதெல்லாம் ஈசுவர சிந்தனையும்
சமாதியும் அவருக்கு வருவனவாயின. வாயில் வைத்துச் சுவைத்ததெல்லாம் அவருக்கு
ஈசுவரப் பிரசாதம். ஆக, இந்திரியங்கள் ஐந்தையும் நன்கு பயன்படுத்தி அவர்
ஈசுவர சந்நிதியையே சார்ந்திருந்தார். மனம் அடங்கப் பெற்றார்க்கு
இந்திரியங்கள் கேடுடையவைகளல்ல என்பதற்கும், பிரசாதம் அல்லது தெளிந்த
நிலையில் மனது திளைத்திருக்கும் என்பதற்கும் அவரது வாழ்க்கையே சான்றாகிறது.
ஸ்திதப்பிரக்ஞன் எப்படி நடமாடுகிறான் என்ற கேள்விக்கு இது விடை :
65. ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு புத்தி: பர்யவதிஷ்டதே
ப்ரஸாதே-உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில், ஸர்வது:காநாம்-எல்லாத்
துன்பங்களுக்கும் ஹாநி: உபஜாயதே-அழிவு ஏற்படுகிறது, ப்ரஸந்ந சேதஸ:-சித்தம்
சாந்தி பெற்ற மனிதன், புத்தி ஆஸு ஹி பர்யவதிஷ்டதே-புத்தி விரைவிலே
நிலைப்படுகிறது
பொருள் : சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன.
சித்தம் சாந்தி பெற்ற பின்ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.
பலபேர் உலகைக் கேடு மிக நிறைந்ததாக நினைக்கின்றனர். நலம் கேடு ஆகிய
இரண்டும் நிறைந்தது உலகம் என்ற எண்ணம் பொதுவாக எல்லார்க்குமுண்டு.
இவ்வுலகம் திருந்தியமையும்பொழுது தங்களுக்கு மனவமைதியுண்டாகும் என்று
அவர்கள் எதிர்பார்க்கின்றனர். உலகில் அல்லல் நிறைந்திருப்பதும் தாங்கள்
அசாந்தியில் மூழ்கியிருப்பதும் இணைபிரியாதவைகளாம். வெளியுலகில் காணும்
கேடுகளெல்லாம் மனதில் இருக்கும் கேட்டின் புறத்தோற்றங்களாம். மனது
திருந்தியமையுமளவு புறவுலகக் காட்சியும் திருந்தியமைகிறது.
உண்மையில் புறவுலகம் கேடுடையது அன்று; அது ஈசுவர சொரூபம். அதைக் கடவுள்
சொரூபமாகக் கருதுமளவு மனது அமைதியுறுகிறது. அமைதியுற்ற உள்ளத்தில் ஆத்ம
சொரூபம் தென்படுகிறது. பிறகு அம்மனதே ஆத்ம சொரூபமாய் மாறுகிறது.
66. நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா
ந சாபாவயத: ஸாந்திரஸாந்தஸ்ய குத: ஸுகம்
அயுக்தஸ்ய-யோகமில்லாதவனுக்கு, புத்தி நாஸ்தி-புத்தியில்லை, அயுக்தஸ்ய ந
பாவநா ச-யோகமில்லாதவனுக்கு மனோபாவனையும் இல்லை, அபாவயத: ந ஸாந்தி
ச-மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை, அஸாந்தஸ்ய குத:
ஸுகம்-சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?
பொருள் : யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோபாவனை
இல்லை. மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தியில்லாதவனுக்கு
இன்பமேது?
விருப்பு வெறுப்பை வென்றவனே யோகி. அத்தகையவன் யுக்தன் எனப்படுகிறான்.
மேலே மொழிந்த விஷயம் மீண்டு மொருமுறை எதிர்மறையாகச் சொல்லப்படுகிறது.
மனமடங்கப் பெறாதவனுக்கு இம்மிளயவும் இன்பமில்லை, புலன்களில்
வேட்கையிருக்குமளவு மனிதன் துன்பப்பட்டே ஆகவேண்டும். துக்கப் பிராப்தி
மட்டுமல்ல, வேறு என்னென்ன நஷ்டங்களெனின், இந்திரியங்களை வெல்லாதவனுக்கு
ஆத்மாவைப் பற்றிய விவேகமில்லை. ஆகையால் ஆத்ம தியானம் அவனால் செய்யமுடியாது.
ஆத்ம தியானம் செய்யாதவனுக்கு ஆத்ம சொரூப ஞானமில்லை. அதினின்று உண்டாகிற
சாந்தியுமில்லை. இத்தனைவித நஷ்டங்கள் மனமடங்காமையால் வருகின்றன.
மனமடங்காதவனுக்கு ஞானம் ஏன் உண்டாவதில்லை? அதற்கு விடை வருகிறது:
67. இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீயதே
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி
ஹி-ஏனெனில், அம்பஸி நாவம் வாயு: ஹரதி இவ-கடலில் தோணியைக் காற்று
இழுப்பது போல், சரதாம் இந்த்ரியாணாம்-(போகங்களில்) சஞ்சரிக்கின்ற
இந்திரியங்கள் (புலன்கள்)
யத் மந: அநுவிதீயதே-மனமும் ஒட்டி இருக்கிறதோ, தத் அஸ்ய ப்ரஜ்ஞாம் ஹரதி-அதுவே அவனது அறிவை இழுத்து செல்கிறது.
பொருள் : இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப்
பின்பற்றிச் செல்லுமாயின், அம்மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவதுபோல்
அறிவை மோதுகிறது.
துடுப்பு, நங்கூரம், உள்யந்திரம், சுக்கான் முதலியவைகளால் ஆளப்பெறாத
கப்பல் காற்றடிக்கும் திசையில் தள்ளுண்டு தடுமாற்றமடையும். அலைகின்ற
இந்திரியங்களைப் பின்தொடரும் மனதுக்கு வரும் கேடும் அத்தகையது. புறவுலகைச்
சார்தற் கென்றே இந்திரியங்கள் அமைந்தவைகள். ஒருவன் தூங்கும் பொழுது அவன்
வாயில் இனிப்புப் பண்டத்தை வைத்தால் மனதின் வேகமின்றியே வாய் தானாக
அப்பண்டத்தைச் சப்புகிறது; கசப்புப் பண்டத்தை வைத்தால் அதைத் துப்புகிறது.
பழக்கத்தால் இவ்வியல்புகள் இந்திரியங்களுக்கு வந்துள்ளன. பண்படாத மனது
இப்பொறிகள் வாயிலாகப் புறவுலகில் போமாயின் அது ஆத்ம சொரூபத்தைப் பற்றிய
விவேகத்தை இழப்பதாகிறது.
அப்படியானால் அத்தகைய இந்திரியங்களை என்ன செய்ய வேண்டும்?
68. தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
மஹாபாஹோ-பெருந்தோளாய், தஸ்மாத்-ஆகையால், யஸ்ய இந்த்ரியாணி-எவனுடைய
புலன்கள், இந்த்ரிய அர்தேப்ய-புலன்களுக்குரிய போக விஷயங்களில் இருந்து
நிக்ருஹீதாநி-மீட்கப் பட்டு விட்டதோ, தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனறிவே நிலைகொண்டது.
பொருள் : ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலைகொண்டது.
இந்திரியங்கள் தத்தம் தொழில் புரியாதிருக்கவேண்டும் என்பதல்ல இதன்
பொருள். வஸ்துக்களை போகத்துக்குரியவைகளென்று எண்ணி அவைகள் மீது
இந்திரியங்கள் உலாவுதலால் கேடு விளைகிறது. நலன் தரக்கூடிய வேறு ஒரு
போக்கில் இந்திரியங்களைப் பழக்கலாம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்
என்பது பழமொழி. ஆனால் அது கெட்ட உபாதியை உண்டுபண்ணுகிறபடியால் அதைத்
தொடவேமாட்டேன் என்று ஸ்ரீராம கிருஷ்ணர் ஆழ்ந்து சங்கற்பித்தார். அதன் பயனாக
அவரது நாடி நரம்புகளில் பெரியதொரு மாறுதல் வந்தமைந்தது. ஒரு நாணயத்தால்
அவரது உடலைத் தூங்கும்பொழுது தொட்டாலும் அவருக்குச் சகிக்க முடியாத வலி
வருவதாயிற்று. அவரைக் கீழ்மையில் இழுக்கக் காமக்கிழத்திகள் தோன்றியவுடனே,
அம்பிகையை எண்ணி அவருக்கு ஆழ்ந்த சமாதி கூடிற்று. இந்திரிய நிக்கிரகம்
என்பது. இந்திரியங்களைக் கீழ்மையினின்று மீட்டெடுத்து மேன்மையில் வைப்பது
என்று அவரது ஜீவிதம் விளக்குகிறது. அப்படி இந்திரியங்களை நியாஸம் செய்பவர்
ஞானம் பெறுகின்றனர். (நியாஸம் -சப்ளிமேஷன்-கீழ்மையை மேன்மையாக மாற்றுதல்)
அப்படி இந்திரியங்களின் தொழிலைத் தூயதாக மாற்றுபவன் அடையும் நன்மை யாது?
69. யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே:
ஸர்வபூதாநாம் யா நிஸா-எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், தஸ்யாம்
ஸம்யமீ ஜாகர்தி-(தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான், யஸ்யாம் பூதாநி
ஜாக்ரதி-மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ, பஸ்யத: முநே: ஸா
நிஸா-பரமனைக் கண்ட (உண்மையை உணர்ந்த) முனிக்கு அது இரவு.
பொருள் : எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய)
முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே
முனிக்கிரவு.
ஸ்தூல உலகில் மக்களுக்குப் பகலாயிருக்கும் வேளையில் ஆந்தை, புலி முதலியன
நன்கு பார்க்கமாட்டா. ஆக, அவ்வேளை அவைகளுக்கு இரவு. அவைகளுக்குப் பகல்
போன்று கண் தெரியும் வேளையோ மற்றப் பிராணிகளுக்கு இரவு. இனி, இவ்வுலகில்
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறை பகல் போன்றிருக்கிறது. திருடர்களுக்குத்
திருட்டைப்பற்றிய விவரங்கள் பகல் போன்று விளங்கும். மற்ற இயக்கங்கள் இருள்
போன்று அவர்களுக்குப் புலப்படா. சூது ஆடுபவர்க்கு அச்செயல்மட்டும் பகல்
போன்று விளங்கும். கற்றவர்க்கு அறிஞர் கூட்டம் பகலுக்கு ஒப்பானது. இங்ஙனம்
இவ்வுலகிலேயே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறை பகல் போன்று விளங்கவும்,
ஏனைய துறைகள் இரவு போன்று விளங்காமலும் இருக்கின்றன.
இந்திரியங்களை வென்ற யோகிக்கு உலகக் காட்சிகள், உலக வியவகாரங்கள்
ஆகியவைகள் இருள்போன்று மறைந்து கிடக்கின்றன. பரமாத்ம தத்துவ சம்பந்தமான
யாவும் பகல் போன்று அவனுக்கு நன்கு விளங்குகின்றன. அனைத்தையும் ஈசுவர
சொரூபமாகக் காண்பவனுக்கு யாண்டும் மங்களம் பொலிகிறது; அவனது வாழ்க்கை
இன்பமே வடிவெடுத்ததாகிறது. இந்திரிய நுகர்ச்சியுடைய போகிக்கு உலகக் காட்சி
பகல். இந்திரியங்களை அடக்கிய யோகிக்குக் கடவுள் காட்சி பகல்.
ஈசுவரக் காட்சி காண்பதால் வரும் நன்மை யாது?
70. ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத்
தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே
ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ
யத்வத்-எவ்விதம், ஆப: ப்ரவிஸந்தி-நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்,
ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்டம் ஸமுத்ரம்-நிறைந்து இருந்து அசையா
நிலைகொண்டிருக்கும் கடல்
தத்வத்-அதே விதமாக, யம் காமா: ப்ரவிஸந்தி-எவன்
விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ), ஸ ஸாந்திம்
ஆப்நோதி-அவன் சாந்தியடைகிறான்
காமகாமீ ந-விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.
பொருள் : கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும்
நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே
புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன்
அதனை அடையான்.
பொருள் : கடலின்கண் கூட்டுதல் குறைத்தல் முதலியன செய்தல் எவருக்கும்
இயலாது. உலகிலுள்ள நதிகளெல்லாம் ஓயாது அதில் வந்து வீழ்ந்தாலும் அது
மிகைபடுவதில்லை. நதிகள் வராதொழியினும் கடல் குறைபடுதலில்லை. உள்ளே வரும்
நதிகளோ உருவை இழந்துவிடுகின்றன. நாம ரூபம் அடிபட்டுப் போய் விடினும் நதி
எப்பொருளாலானதோ அப்பொருளுக்கு நஷ்டமில்லை. கருவி கரணங்களை வென்ற முனிவனது
மனம் கடல் போன்றது. காமத்தை உண்டுபண்ணும் பொருள்கள் ஓயாது அவனது
முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கலாம். பொறிவாயிலாக அவன் அவைகளைப்
பொருள்படுத்தவும் செய்யலாம். கடலில் நதிகள் ஒடுங்குவது போன்று
இந்திரியார்த்தங்கள் என்னும் சித்த விருத்திகள் அவனது உள்ளத்தில் ஒடுங்கி
மறைகின்றன. மனம் ஒரு விகாரத்தையும் அடையாத பரிபூரண நிலையில் அவன்
வீற்றிருக்கின்றான். அகண்டாகார விருத்தி யென்று அதைப் பகர்வதுண்டு.
கடல்போன்று அகண்டமாய்விடுகிறது ஞானியின் உள்ளம். கடலைக் கலக்கிச்
சேறுபடுத்த யாராலும் முடியாது. முனியின் நிறைமனது கலங்கிய மனது ஆவதில்லை.
சாந்தம் அல்லது ஜீவன் முக்தி என்ற பெருநிலையும் அவனுக்கே உரியது. ஆசை
வலையில் அழுந்துபவர்க்கும் அதற்கும் வெகு தூரம்.
இந்நிலையை அடைதற் பொருட்டுச் சாதகன் என்ன செய்ய வேண்டும்?
71. விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸாந்திமதிகச்சதி
ய: புமாந்-எந்த மனிதன், ஸர்வாந் காமாந் விஹாய-எல்லா இன்பங்களையும் துறந்து
நிர்மம:
நிரஹங்கார:-எனதென்பதற்றான், யானென்பதற்றான், நி:ஸ்ப்ருஹ:
சரதி-இச்சையற்றான், ஸ ஸாந்திம் அதிகச்சதி-அவனே சாந்தி நிலை அடைகிறான்.
பொருள் : இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான்.
ஆசை இருக்குமளவு மனிதனுக்கு அசாந்தி; ஆசை அறுபடுமளவு அமைதி உண்டாகிறது.
நான், எனது என்னும் எண்ணம் மனிதனைக் கரும பந்தத்தில் தளைக்கிறது. நான்,
எனது என்ற மன விருத்திகளை அகங்கார மமகாரம் என்று இயம்புவதுண்டு. கடலானது
அலைகளாக வடிவெடுத்துச் தன்னைச் சிறு சிறு துண்டங்களாக மேற்பரப்பில்
காட்டிக்கொள்கிறது. தோற்றத்தளவில் கடல் துண்டுபட்டது. உண்மையில் அது
அகண்டமானது. அகங்காரமும் மமகாரமும் சேர்ந்து மனிதனிடத்து ஜீவபோதம் என்ற
அலையை உண்டுபண்ணுகின்றன. ஆசை என்னும் காற்றே அகங்காரம் மமகாரம் என்ற அலையை
உண்டுபண்ணுதற்கு முதற் காரணம். ஆசை ஒழிந்தால் நான், எனது என்பன ஒழிகின்றன.
அகங்கார மமகாரம் அற்றவிடம் அகண்டாகார ஆனந்த சொரூபமே எஞ்சியுளது. நான், எனது
என்னம் இப்பந்தங்களை ஒழித்தற்பொருட்டு வாழ்தலே பெருவாழ்வாம்.
ஸ்திதப்பிரக்ஞன் எப்படி வாழ்கிறான் என்பது மீண்டும் இயம்பப்படுகிறது. அத்தகைய வாழ்வினின்று உண்டாகும் மாண்பு வருமாறு :
72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி
பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி, ஏநாம் ப்ராப்ய
ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை, அந்தகாலே அபி-இறுதிக்
காலத்திலேனும் அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு, ப்ரஹ்ம நிர்வாணம்
ருச்சதி-பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.
பொருள் : பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு
மயங்குவதில்லை. இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம
நிர்வாண மெய்துகிறான்.
கனவில் இருக்கும்போது கனவில் காண்கிற பொருள்களுக்கு மதிப்புண்டு; ஆங்கு
உண்டாகிற இன்ப துன்பங்களுக்கும் மதிப்புண்டு. அத்தகைய கனவைவிட
பெருநிலையாகின்றது நனவு. நனவுக்கு வந்தமையுடனே கனவைப்பற்றிய மயக்கம்
போய்விடுகிறது. கனவில் வந்த இன்ப துன்பங்களுக்குப் பிறகு மதிப்பில்லை.
அங்ஙனம் கனவுக்கும் நனவுக்கும் மேம்பட்ட நிலையொன்று உண்டு. அது பிரம்ம
நிர்வாணம் என்று பகரப்படுகிறது. அதை அடையப் பெற்றவனுக்குக் கனவு, நனவு ஆகிய
அவஸ்தைகளைப்பற்றிய மயக்கம் கிடையாது.
பிரம்ம நிர்வாணம் என்பது அபரோக்ஷ அனுபூதி. மனம் மொழிக்கு எட்டாத
பேரானந்தப் பெருநிலை அது. அப்பெரு நிலையினின்று கீழே இறங்கி வந்தவன் ஜீவன்.
திரும்பவும் அப்பெருநிலையை அடையப்பெற்றவன் முக்தன். நதிகளெல்லாம் கடலைப்
போய்ச் சேர்ந்து கடலில் இரண்டறக் கலத்தல் போன்று பிரம்ம நிர்வாணம் அடைதல்
ஜீவர்களின் குறிக்கோளாம். சாகும் தறுவாயில் அது வந்து அமைவதாயினும் அது
முக்தியேயாம். விடுதலை யென்றும் வீடுபேறு என்றும் அதைப் பகர்வதுண்டு.
இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஸாங்க்யயோகோ நாம த்விதீயோऽத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ
கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும்
உபநிஷதத்தின்கண் ஸாங்கிய யோகம் என்ற இரண்டாம் அத்தியாயம்.
Il est donc possible que la maladie à VIH puisse être guérie car j'ai été victime d'une arnaque tant de fois, pas avant de tomber sur ce grand homme, le Dr Akhigbe, qui m'a aidé au début. Je ne crois jamais à tout ce commentaire et à ce que je poste à son sujet. été infecté par le VIH depuis deux ans, depuis deux mois à peine, je lis sans cesse le témoignage de cet homme appelé dr akhigbe; ils disent que cet homme est si puissant qu'il a guéri différents types de maladies. Je surveille de près le poste de certains cet homme et moi avons découvert qu'il était réel, alors j'ai décidé de lui faire subir un procès. Je l'ai contacté pour demander de l'aide. Il m'a dit qu'il allait m'aider à trouver le traitement qui me suffisait pour lui envoyer de l'argent pour préparer le médicament. après quoi il me sera envoyé via le service dhl, ce que, à ma plus grande surprise, le médicament m'a été envoyé, il m'a donné des instructions sur son utilisation. Après trois semaines, je devrais passer au contrôle, prendre le médicament et suivre. son instruction après trois semaines Je suis retourné à l'hôpital pour un autre test. Au début, j'ai été choqué lorsque le médecin m'a dit que j'étais négatif. J'ai demandé au médecin de vérifier à nouveau et le résultat était toujours le même négatif, c'est comme ça que je ne suis pas infecté par le VIH. choc j'ai décidé de venir partager mon propre témoignage avec vous pour ceux qui pensent qu'il n'y a pas de remède contre le VIH. Maladie, remède enfin, arrêtez de douter et contactez dr akhigbe par courriel drrealakhigbe@gmail.com, il vous aidera également wattssap via +2348142454860, il est également parfait pour soigner les maladies diabétiques, l’herpès, le VIH / sida, la sclérose latérale amyotrophique, le cancer et les hépatites cancéreuses A et B, croyez-moi, une maladie mortelle n’est plus une condamnation mortelle, car dr akhigbe a la guérison. .
பதிலளிநீக்கு