ஞாயிறு, 11 அக்டோபர், 2015

கால்நடைகளில் பாம்புக்கடியும் நச்சுத்தன்மையும்

கால்நடைகளில் பாம்புக்கடியும் நச்சுத்தன்மையும்


கால்நடைகளில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு இறப்பது அனைவரும் அறிந்த ஒன்று. பாம்பின் விஷம் தீண்டி கால்நடைகளில் உயிரிழப்பு ஏற்படும். இதனால் கால்நடை வளர்ப்பேருந்து தாங்க முடியாத மனவேதனையும் பொருளாதார இழப்பீடும் ஏற்படுகிறது.
விஷ பாம்புகள்: 1. ராஜநாகம், 2. பங்காரஸ் கட்டுவிரியன், 3. கட்டு விரியனில் இருவகை உண்டு. இவை சாதாரண பங்காரஸ் சீருலஸ் மற்றும் குறுக்கு பட்டைகளைக் கொண்ட பங்காரஸ் பேசியேடஸ் எனப்படுவனவாகும். 4. வைப்பாரா ரஸ்ஸலை - கண்ணாடி விரியன், 5. எக்கிஸ் கேரினேட்டஸ் - சுருட்டை விரியன், 6. குரோட்டலஸ் - கிலுகிலுப்பை பாம்பு போன்ற பாம்புகள் விஷப்பாம்புகளாகும். டயாஸ் என்றழைக்கப்படும் சாரை பாம்பு விஷமற்ற பாம்பாகும்.
பொதுவாக ஆடுகள் காட்டில் மேயும்போது பாம்பினைப் பார்த்துவிட்டால் இரண்டு காதுகளையும் மேலே தூக்கிக்கொண்டு சிறிது அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும். பிறகு இருப்பிடத்தை நோக்கி ஒடிவந்துவிடும். நல்லபாம்பு எதிர்க்கும் குணம் கொண்டதன்று. தம்மை சீண்டும்போது பல நேரங்களில் அச்சூழலில் இருந்து விடுவித்துக் கொள்ளவே முயல்கிறது. கால்நடையைத் தாக்கத் தயாராகும்போது இது கீழ்த்தாடையைக் கீழே இறக்கி வாயைத்திறந்து கோரைப் பற்களை நிமிர்த்தி தாக்கி உயிரியின் உடலில் நஞ்சை செலுத்திகொல்கின்றன.
பாம்பின் நஞ்சு: பாம்பின் நஞ்சு இரு வகைப்படும். ஒரு வகை நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடியது. இதற்கு நியூரோ டாக்சின் என்று பெயர். நல்ல பாம்பின் விஷம் இவ்வகையைச் சார்ந்தது. இவ்விஷம் கால்நடையின் உடலில் ஏறியதும் பிரானிக் நரம்பு எனப்படும் உதரவிதான நரம்பினை பாதித்து உதரவிதானத்தை செயலிழக்கச் செய்கிறது. இதனால் சுவாசம் தடைபட்டு மரணம் சம்பவிக்கிறது. மற்றொரு வகை ரத்த ஓட்டத்தைத் தாக்கக்கூடியது. இதற்கு ஹீமோடாக்சின் என்று பெயர். கண்ணாடி விரியன்பாம்பின் நஞ்சு இவ்வகையைச் சார்ந்தது. இவ்விஷம் கால்நடைகளின்உடலில் சென்றதும் ரத்த சிவப்பு அணுக்களும் ரத்த நாளங்களும் சிதைக்கப்படுகிறது. இதனால் ரத்தம் ரத்தநாளங்களை விட்டு வெளியேறி திசுக்களுக்கு இடையில் உறைந்துவிடுகிறது. இதனால் கால்நடையானது மரணத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
1. கடிபட்ட கால்நடையை ஓடவைக்கவோ, விரட்டவோ கூடாது. ஒரு இடத்தில் கட்டி வைத்து அமைதிப்படுத்த வேண்டும்.
2. கால்நடை மருத்துவருக்கு உடனடியாக தகவல் கொடுத்து வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
3. கால்நடையைக் கடித்த பாம்பு எந்த வகையானது என்பதைக் காண நேரிட்டால் கால்நடை மருத்துவரிடம் கூறுவது மிகவும் அவசியமாகும்.
4. பாம்பு கடித்த இடத்தை தேடிக் கண்டுபிடித்து சுத்தமான தண்ணீர் மற்றும் கார்பாலிக் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
5. கடிபட்ட இடத்தை கத்தியால் கீறி வாய் வைத்து உறிஞ்சக்கூடாது. ஏனெனில் வாய்ப்பகுதியில் புண் இருந்தால் ஆபத்து நேரிடும். கடிபட்ட இடத்தில் ஐஸ் கட்டியை வைக்கக்கூடாது.
6. கடிபட்ட இடத்திற்கு மேல் இறுக்கமாக கயிறை வைத்து கட்டக்கூடாது. அப்படிக் கட்டினால் கடிபட்ட இடத்தில் இருந்து கயிறு கட்டியிருக்கும் இடம் வரை விஷம் தேங்கி அந்தப்பகுதி முழுமையாக அழுகிவிடும். எனவே கயிறை ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடை செய்யாதவாறு கட்டுப்போட வேண்டும். பாம்பினுடைய விஷத்தின் வீரியத்தைப் பொறுத்தே கால்நடைகளில் உயிரிழப்பு ஏற்படுகிறது.
7. கால்நடை மருத்துவர் வந்து கடித்த பாம்பிற்கான விஷமுறிவு மருந்தினை ஊசி மூலம் கால்நடையின் உடலில் செலுத்தும்போதுதான் கால்நடையானது உயிராபத்திலிருந்து மீளும். காலதாமதம் கால்நடையின் உயிருக்கே கேடு விளைவிக்கும்.
8. கால்நடையைக் கடித்தது விஷமற்ற பாம்பு என்று கால்நடை மருத்துவர் மூலம் அறியப்பட்டால் கடித்த இடத்தில் இதர கிருமிகள் உட்புகுந்து பின்னாளில ஏதேனும் கெடுதல் செய்யாமலிருக்க டெட்டனஸ் டாக்ஸைடு தடுப்பூசிப் போடுவது அவசியம்.
கால்நடைப் பண்ணையில் பாம்பு வராமல் தடுப்பது எப்படி?
கால்நடைப் பண்ணையைச் சுற்றி அடர்ந்த புதர்களையும் அடர்ந்த பூச்செடிகளையும் அகற்றுவது மிகவும் அவசியம். எலிகள் தவளை போன்றவற்றின் நடமாட்டத்தைப் பண்ணையில் கட்டுப்படுத்த வேண்டும். கால்நடைப் பண்ணைக்கு அருகாமையில் கோழிப்பண்ணை மற்றும் மீன் உள்ள குளங்கள் இருந்தாலும் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் தென்படும். பாம்புகளின் வாழிடங்களான கரையான்கள் விட்டுச்சென்ற கரையான் புற்றுகள், மரக்குவியல்கள், கற்குவியல்கள் போன்றவை கால்நடைப் பண்ணையின் அருகிலிருந்தால் இவற்றையும் களைய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக