செவ்வாய், 24 மார்ச், 2015

ராஜாவின் மனக்கவலை - ஜென் கதைகள்

ராஜாவின் மனக்கவலை - ஜென் கதைகள்

(The Confused King - Zen Stories for Kids)

 ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா.
அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.
அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.
ஆகவே மந்திரி ஒரு தந்திரம் செய்தார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?

Also Read: ராஜாவும் முட்டாள் குரங்கும் (Foolish Monkey and The King Story)
ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!
மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி. ‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்? அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!
குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.
The Confused King Sitting On The Horse
அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.
இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான். குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

Also Read: தெனாலிராமன் விற்ற குதிரை (Tenali Raman and the Horse Story)
கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?
அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார்.
அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானான்.
இதைப் பார்த்த மந்திரி குருநாதரிடம் ஓடினார். ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.
உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்’ என்றார் ஜென் குரு. ‘நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!

சனி, 21 மார்ச், 2015

பில்கேட்ஸ் இறந்தபின் சொர்க்கமா?.. நரகமா? ...

 பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.
எமன் சொன்னான்,
"நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்."
"நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?"
" ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!"
"அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"
நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பில்கேட்ஸ்.
இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி...
"ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." என்று பில்கேட்ஸ் சொன்னபோதும்
"வா சொர்கத்தை பார்க்கலாம்.." என சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் எமன்.
அங்கே,
நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்கேட்ஸ்க்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை..
நீண்ட யோசனைக்குப்பின்,
"தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் பில்கேட்ஸ்.
"உன் விருப்பம்", எமன்.
இரண்டு வாரங்களுக்குப்பின்,
பில்கேட்ஸின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.
அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்கேட்ஸை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்.
"எப்படி இருக்கே பில்கேட்ஸ்?" என்றான் எமன்.
பில்கேட்ஸ் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில்,
"முடியல... நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?"
எமன் சொன்னான்,
"அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !"

உதவி - Tamil Motivational story

ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.

எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி கூறியது

மற்றொரு நாள்.

ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.

ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.

விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.

கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது. எறும்புக்கும் ன்றி சொன்னது

அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.

எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்? 
 
 
 
விநாயகர் இப்படி எலியின் மீது சவாரி செய்வதற்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையும் உள்ளது. அனைத்து தடங்கல்களையும் நீக்கி, பாரபட்சம் இன்றி அனைவரையும் ஆசீர்வதிப்பவர் தான் விநாயகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மற்ற கடவுள்களை வணங்குவதற்கு முன்பாக விநாயகரை ஏன் வணங்க வேண்டும் என்பதற்கு அவர் எலியின் மீது பயணிக்கும் கதையே விளக்கமளிக்கும். விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்? விநாயகர் பயணிக்கும் எலி, கடந்த ஜென்மத்தில் முனிவரால் சபிக்கப்பட்ட ஒரு உபதேவதையாக விளங்கியது என்ற விஷயம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். விநாயகர் ஏன் எலியின் மீது பயணிக்கிறார் என்ற கதையை முழுமையாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். க்ரோன்ச்சாவின் கதை விநாயக புராணத்தின் படி, விநாயகரின் எலி கடந்த ஜென்மத்தில் உபதேவதையாக இருந்துள்ளது. அதனை க்ரோன்ச்சா என அழைத்தனர். இந்திரனின் அரச சபையில் வாமதேவ முனிவர் என்ற மிகுந்த ஞானம் கொண்ட முனிவரின் கால்களை க்ரோன்ச்சா மிதித்து விட்டது. வேண்டும் என்றே தன் காலை மிதித்து விட்டது என எண்ணி, வெகுண்டு எழுந்த வாமதேவ முனிவர், அதனை ஒரு எலியாக மாற சாபம் அளித்தார். இதனை கேட்டு அதிர்ந்த க்ரோன்ச்சா, அவர் காலில் மண்டியிட்டு கருணை காட்ட மன்றாடியது. இது வாமதேவ முனிவரின் கோபத்தை குறைத்தது. தன் சாபத்தை திருப்பி பெற இயலாது என கூறினார். ஆனால் விநாயகரின் வாகனமாக விளங்கும் எனவும் கூறினார். அதனால் அனைவராலும், ஏன் பிற கடவுள்களாலும் கூட வணங்கப்படும் ஒன்றாக மாறியது. இதன் விளைவாக, வாமதேவ முனிவரின் சாபத்தினால் க்ரோன்ச்சா எலியாக உருமாறி, மகரிஷி பரஷர் ஆசிரமத்தில் விழுந்தது. க்ரோன்ச்சாவின் பயங்கரவாதம் இருப்பினும் க்ரோன்ச்சா சாதாரண எலியல்ல. சொல்லப்போனால், மலையளவில் பெரியதாக விளங்கியது. அதே போல் அதனை பார்த்த அனைவரையும் அஞ்ச வைத்தது. பல வகையான தொந்தரவுகளை அளித்து, கண்ணில் பட்ட அனைத்தையும் அழித்து வந்தது. உலகத்தில் வாழ்ந்த மக்களுக்கு பயங்கரத்தின் மற்றொரு அர்த்தமாக விளங்கியது. விநாயகரின் வாகனம் இந்நேரத்தில் தான் பரஷர் ரிஷியின் ஆசிரமத்திற்கு விநாயகர் அழைக்கப்பட்டார். அவரை பரஷர் ரிஷியும் அவரின் மனைவியுமான வத்சலாவும் கவனித்துக் கொண்டனர். ராட்சச எலியை பற்றியும், அது உருவாக்கியுள்ள பயத்தை பற்றியும் கேள்விப்பட்ட விநாயகர் அதனை எதிர்கொள்ள முடிவெடுத்தார். தன் ஆயுதங்களின் ஒன்றான பாஷாவை (சுருக்கு) எடுத்த விநாயகர், க்ரோன்ச்சா இருக்கும் திசையில் அதனை பறக்க விட்டார். அந்த பாஷா மிகவும் பிரகாசமாக இருந்ததால் அதன் வெளிச்சம் இந்த அண்டம் முழுவதும் படர்ந்தது. எலியை துரத்திய பாஷா அதன் கழுத்தை சுற்றிக் கொண்டது. அதை அப்படியே விநாயகரின் காலடியில் கொண்டு சேர்த்தது. இதனால் விநாயகரிடம் மன்னிப்பு கோரிய க்ரோன்ச்சா அவரின் வாகனமாக மாறியது.

Read more at: http://tamil.boldsky.com/inspiration/short-story/why-lord-ganesha-rides-mouse-006475.html

ஜோதிடன் சூழ்ச்சி

ஜோதிடன் சூழ்ச்சி

ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.

அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.

பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான்.

ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார்.

தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி. "அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார்.

மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக.

"அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்." தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன் பணிவாக.

சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான்.

"அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"

"ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான்.
"உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.

அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்.

மன்னனுடைய வெற்றி

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!

செவ்வாய், 10 மார்ச், 2015

சுதந்திர தினம்

சுதந்திர தினம்


Independence-Day
‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம். நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் நமது இந்திய நாட்டின் பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.
ஆரம்பகால இந்தியா
‘தீப கற்பம்’ என்றும் ‘பாரத தேசம்’ என்றழைக்கப்படும் நமது நாடானது, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காளதேசம், எனப் பெருவாரியானப் பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது. மன்னர்கள் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நமது நாடு, செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தது. தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து, அவர்களது புகழை மேன்மேலும் ஓங்கச் செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, இசுலாமியர்கள் (1206–1707), தில்லி சுல்தானகம் (1206–1526), தக்காணத்து சுல்தானகங்கள் (1490–1596), விஜயநகரப் பேரரசு (1336–1646), முகலாயப் பேரரசு (1526–1803), மராட்டியப் பேரரசு (1674–1818), துர்ரானி பேரரசு (1747–1823), சீக்கியப் பேரரசு (1799–1849) எனப் பலரும் நமது நாட்டின் எல்லைகளையும், செல்வங்களையும் விரிவுபடுத்துவதிலே மிகவும் கவனமாக இருந்தனர்.
மேலைநாட்டவர்களின் வருகை
விஜயநகரப் பேரரசு காலத்தில், நமது இந்தியாவிற்குக் கடல்வழியாக முதன்முதலில் வந்தவர் தான், வாஸ்கோடகாமா. ‘வந்தோரை வாழவைக்கும் நாடெங்கள் நாடு’ என்ற பெருமை நமது இந்தியாவிற்குத் தொடக்கத்திலிருந்தே உள்ளது. ஒரு போர்ச்சுகீசியரான அவர், கடல் வழியே இந்தியாவிற்கு வழியைக் கண்டு பிடித்து, நமது நாட்டில் கால்பதித்தார். இவரது வருகையைத் தொடர்ந்து, இந்தியாவில் உணவுக்கு சுவை சேர்க்கும் கறிமசாலா பொருட்கள் இருப்பதை அறிந்த ஐரோப்பியர்கள், அதைத் தங்களது நாடுகளுக்கு விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட எண்ணி, கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர். இதுவே, பண்டமாற்று முறைக்கு வித்திட்டது. போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச், ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய நாட்டவர்கள் நமது நாட்டிற்கு வருகைத் தந்ததால், அவர்களும் போர்ச்சுகீசியர்கள் போலவே வாணிக முகாம்களை அமைக்க எண்ணி, சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர். 1619 ஆம் ஆண்டில், பிரெஞ்சுகாரர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். வாணிகம் என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழையும் ஐரோப்பியர்கள், நாட்கள் செல்ல செல்ல அந்நாட்டின் சிம்மாசனப் பொறுப்பைக் கைப்பற்றுவர். அதற்கேற்றவாறு, பல நாட்டவரும் இந்தியாவுக்குள் நுழைந்ததால், பல போர்களும், குழப்பங்களும் நிலவியதால், ஐரோப்பியர்கள் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். ஆனால், தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளையும், ஒரே நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி
ஐரோப்பியர்களை மிகவும் சூழ்ச்சியால் வென்ற ஆங்கிலேயர்கள், இந்தியாவில் இருந்து வாணிகம் செய்து வந்ததோடு மட்டுமல்லாமல், அப்போதைய முகலாயப் பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பின்னர், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு அவர்களது கிழக்கிந்திய கம்பெனியையும் நிறுவினர். நாளடைவில் அவர்கள் வரி செலுத்தாமலேயே வாணிகம் செய்ததால், அவர்களை வங்காளத்தின் நவாப் ‘சிராஜ் உட துலாத்’ என்பவர் எதிர்த்ததால், 1757 ஆம் ஆண்டில், ‘பிளாசி யுத்தம்’ தொடங்கியது. இதில், நவாப் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றதால், அவர்கள் இந்தியாவில் உள்ள நிலங்களை ஆக்கிரமிக்கத் துவங்கினர். இதையடுத்து, 1764 ஆம் ஆண்டில் பக்சார் போரிலும் வெற்றிப் பெற்று, வங்காளத்தை ஆட்சி செய்ய அப்போதைய முகலாயப் பேரரசரிடம் அனுமதிப்பெற்றதால், இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர அதுவே, முதன்முதல் காரணமாக இருந்தது. இதன் பின்னர், வரிகள், நிலங்கள் கையகப்படுத்துதல், போன்றவற்றால் இந்தியா பஞ்சம் வரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது. 20 மில்லியன் மக்கள் ‘கிரேட் பாமின் ஆஃப் 1876–78’ மற்றும் ‘இந்தியன் பாமின் ஆப் 1899–1900ல்’ மடிந்ததொடு மட்டுமல்லாமல், ‘மூன்றாம் பிளக் பாண்டமிக்’ என்ற கொடிய நோயால் மேலும் 10 மில்லியன் மக்கள் செத்து மடிந்தனர். கிழக்கிந்திய நிறுவனத்தால், ஏற்பட்ட இத்தகைய மாபெரும் இழப்பைக் கண்டு வெகுண்டத் துடிப்பான இளைஞர்கள் பலரும் இணைந்து, ‘1857 இந்திய கலகம்’ என்ற இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர் ஷா சபர் அவர்களை மானசீக தளபதியாகக் கொண்டு உருவாக்கினர். இதுவே, ‘முதல் இந்தியப் போர்’ என்று அழைக்கப்பட்டது. ஒரு வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் தளபதியையும் நாடு கடத்தி, முகலாய வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்
முதல் இந்தியப் போரைத் தொடர்ந்து, தனது அதிகாரத்தை நேரடியாக செயல்படுத்த முடிவெடுத்தனர், ஆங்கிலேயர்கள். என்னதான் ஆங்கிலேயர்கள் ஒருபுறம் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து கொண்டே இருந்தாலும், நமது இந்தியர்கள் ‘முதல் இந்தியப் போரைத்’ தொடர்ந்து, பல போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். 1867ல் ‘கிழக்கிந்திய கூட்டமைப்பை’ தாதாபாய் நவ்ரோஜியும், 1876ல் ‘இந்திய தேசிய கூட்டமைப்பை’ சுரேந்திரநாத் பானர்ஜியும் உருவாக்கினர். 1877 ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டப்பட்டதால், ஓய்வுபெற்ற பிரித்தானிய பொதுப்பணி சேவகர் ஏ.ஓ.ஹ்யூமினால் இந்தியர்கள் பலரும் தூண்டப்பட்டு, 1885ல் மும்பையில் எழுபத்து மூன்று இந்தியப் பிரதிநிதிகள் இணைந்து ‘இந்திய தேசிய காங்கிரஸை’ நிறுவினர். சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய், விபின் சந்திர பாலர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஸ்ரீ அரபிந்தோ, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, பக்கிம் சந்திர சட்டர்ஜி, சர் சயீது அஹ்மது கான், ரபீந்திரநாத் தாகூர் மற்றும் தாதாபாய் நவ்ரோஜி போன்றோரின் உழைப்பு விடுதலை உணர்வுக்கான புத்தெழுச்சியை பரவச்செய்தது.
1905ல், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டார், அப்போதைய வங்காளத்தின் வைஸ்ராயும், கவர்னர் ஜெனரலுமான கர்சன் அவர்கள். வங்காளப் பிரிவினையைக் கண்டு கொதித்த இந்தியர்கள் பலரும், சுதேசி மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். முதல் இந்திய தேசியவாதியாக இருந்து, சுயராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டார், பால கங்காதர திலகர். இதனால், தேசியவாதம் அடிப்படைவாதம் என இரண்டு தலைமைகளில் காங்கிரஸ் இரண்டாக 1907ல் பிரிந்தது. தொடர்ச்சியான வன்முறைகளும், கொந்தளிப்புகளும் நாட்டில் நிலவியதால், அதைத் தடுக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், தலைவர்களான பால கங்காதர திலகர் மற்றும் வ.உ.சியை 1908 ஆம் ஆண்டில் கைது செய்தனர். வங்காளப் பிரிவினையால் தொடர் போராட்டங்கள் ஏற்பட்டதால், அந்தச் சூழ்நிலையைத் தணிக்க முயற்சித்த ஆங்கிலேயர்கள், 1911 ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் டர்பாரில் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தனர். அவர், வங்கப் பிரிவினையை மீண்டும் பெறப்போவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், டெல்லியின் வடக்குப்பகுதியில் கட்டப்படவிருந்த நகரத்திற்கு தலைநகரத்தை கல்கத்தாவிலிருந்து மாற்றுவதாகவும் அறிவித்தார்.
முதல் உலகப் போரும், இந்தியர்களின் துணிவும்
உலகிலுள்ள நாடுகளுக்கிடையே நிலவிய மோதல்கள் மற்றும் விரோத போக்குகளால் 1914ல் ‘முதல் உலகப் போர்’ ஆரம்பமானது. ஆங்கிலேயர்கள் நமது இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்ததால், அவர்களது போர் முயற்சிகளுக்கு நமது இந்தியா பெருமளவில் பங்களித்தது. முதல் உலகப்போரின் பின்விளைவுகளாக உயர் உயிரிழப்பு விகிதம், உயர்ந்த பணவீக்கம், பரவிய இன்புளூயன்ஸா கொள்ளைநோய் மற்றும் போரின்போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பு போன்றவை, இந்திய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பிரித்தானிய ஆட்சியைத் தூக்கியெறிய இந்திய வீரர்கள் முற்பட்டனர். அச்சமயம், அதாவது, 1915 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். இந்திய மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், 1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட் சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். இதன் மூலம் ‘பத்திரிக்கைகளை மூடுதல், விசாரணையின்றி அரசியல் செயல்பாடுகளை நசுக்குதல், மற்றும் கைதாணை இல்லாமல் கலகம் அல்லது ராஜ துரோகத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் எந்த ஒரு தனிநபர்களையும் கைது செய்தல்’ போன்ற அக்கிரமங்களை, அதிகாரம் என்ற பெயரில் துஷ்ப்ரயோகம் செய்தனர், வைஸ்ராய்கள். மேலும், 1919ல், அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற சந்தேகித்திற்கு இடமற்ற கூட்டத்தை நோக்கி சுடமாறு பிரித்தானிய ராணுவத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் ஆணையிட்டார். இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ் கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது. 1920 ஆம் ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்’ போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி அவர்கள், முதல் சத்தியாக்ரஹ இயக்கத்தைத் தொடங்கி, ஆங்கிலேயர்களை எதிர்த்தார். இதனால், காந்திக்கு 1922ல் ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டு, இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார். 1929ல், டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசினார். இதை மிகவும் கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், ‘அமைதியால் மட்டும் தான் சுத்தந்திரம் அடைய முடியுமென்று’ எண்ணி, 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ நடத்தினார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அடுத்த ஆண்டில், ‘காந்தி-இர்வின்’ ஒப்பந்தம் கையெழுத்தானதோடு மட்டுமல்லாமல், அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்த மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தியா திரும்பினார். அதே ஆண்டில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டார்.
இரண்டாம் உலகப் போரில் இந்தியா கலந்துகொண்டது. மேலும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரித்தனர். 1940ல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943 ஆம் ஆண்டில், நேதாஜி இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜாப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946ல் ‘ஆர்ஐஎன் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைதல்
சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. ஆனால், பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள், ஜூன் 3 ஆம் தேதியன்று ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது. மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.
சுதந்திர தின கொண்டாட்டங்கள்
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்குவார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர், விடுமுறை அளிக்கப்படும். டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ஒவ்வொரு பிரஜைக்கும் முக்கியமான தினம் என்பதால், அனைவரும் தங்களது வாழ்த்துகளை, இந்நாளில் தங்களது பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!

குடியரசு தினம்

குடியரசு தினம்


republic-day
இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.
ஆங்கிலேயரின் ஆட்சி
ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைதல்
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.
இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியக் குடியரசு தினம்
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
குடியரசு தினக் கொண்டாட்டம்
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.
வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்


Teachers-Day
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
ஆசிரியர் தின வரலாறு
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.
ஆசிரியர் பணி என்றால் என்ன?
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
ஆசிரியர் தினம்
தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில்,  தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.
இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.
1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி


Gandhi-Jayanti
நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் ‘தேசத் தந்தை’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, அனைத்து மதத்தவர்களும் வாழும் நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. நம் நாட்டின் தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படும் இத்தினத்தை, ‘சர்வதேச அஹிம்சை தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. இந்தியத் தலைவர்களில் எப்போதும் நினைவில் நிற்கும் இவர், அஹிம்சை மற்றும் சத்யாக்ரஹ வழிகளைப் பின்பற்றி, நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததால், அவ்விரு கொள்கைகளுக்காக உலகப் பிரசித்திப் பெற்றார். இதன் மூலமாக அவ்விரு கொள்கைகளைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல; மேலும் அக்கொள்கைகளே ஒருவரின் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான மிகவும் பயனுள்ள முறைகள் என்பதை நிரூபித்தார். அவரின் இந்த நம்பிக்கையே, அனைவரும் அவரை கவனிக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், வரலாறு காணாத மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவராகப் போற்றச் செய்தது. அவருடைய தனித்துவமான கொள்கைகளால் உலகளவில் உள்ள பெருந்தளைவர்களான மார்ட்டின் லூதர் கிங், ஜேம்ஸ் லாசன், நெல்சன் மண்டேலா, போன்ற பலரும் ஈர்க்கப்பட்டதால், அவர் இன்றளவும் உலகம் முழுவதும் அனைவரின் மனத்திலும் நிலைத்து நிற்கிறார் .இப்படிப்பட்ட பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. காந்தி மற்றும் காந்தி ஜெயந்தி பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.
காந்திஜி பற்றிய சில தகவல்கள்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கிய அவர், தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார். பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், ஆங்கிலேயர்களிடமிருந்து நமது நாட்டை மீட்க அஹிம்சை வழியில் போராடினார்.
அதன் பின்னர், இந்தியா திரும்பிய அவர், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் நோக்கமாக, 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ‘ரவ்லத் சட்டம்’ மற்றும் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு’ குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ‘ஒத்துழையாமையை இயக்கத்தினை’ 1922  ஆம் ஆண்டில் தொடங்கினார். இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது. இவ்வியக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் ‘சௌரி சௌரா’ என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அந்நியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 ஆம் ஆண்டு மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இதனால், காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம்.
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினைத் தொடங்கிய அவரின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது.
காந்தி ஜெயந்தி விழா மற்றும் கொண்டாட்டம்
காந்தி ஜெயந்தி திருநாளன்று, நமது மக்கள், தேசத்தந்தை அஞ்சலி செலுத்தும் விதமாக பல பிரார்த்தனை சேவைகளையும், சமூக செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நடத்துவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை கெளரவிக்கவும் விதமாக, கலைப் பிரியர்கள் காந்திய கொள்கைகள் மற்றும் சுதந்திரத்திற்காக அவர் கையாண்ட வழிமுறைகளைப் பிரதிபலிக்கும் கண்காட்சிகளை  வருடந்தோறும் நடத்தி வருகின்றனர். சில இடங்களில், அஹிம்சை வழியில் செல்வோருக்கு, விருதுகளை வழங்குவர். காந்தியின் வாழ்க்கை மற்றும் அறவழிப் போராட்டங்களை இளந்தலைமுறையினருக்குக் கற்பிக்க எண்ணும் சிலர், பல இடங்களில் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய சிறப்பு உரையாற்றுவர்.
பள்ளி, கல்லூரிகளில் காந்தி ஜெயந்தி
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 2 ஆம் தேதி ‘காந்தி ஜெயந்தி’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை, தேசிய விடுமுறை தினமாக அரசு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் அறிவித்திருக்கிறது. மேலும், காந்தியின் பெருமையை உலகமே அறியும் வண்ணம், அக்டோபர் 2 ஆம் தேதியை, ‘சர்வதேச அகிம்சை தினமமாக’ ஐக்கிய நாடுகள் பொது சபை (UNGA) சமீபத்தில் அறிவித்து, மென்மேலும் காந்திக்கும், காந்திய கொள்கைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக, அன்றைய தினத்தன்று நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும். காந்திஜியின் அறநெறிகள் அனைவருக்கும் பரவ வேண்டுமென்று எண்ணி, மக்கள் தங்களது பிரியமானவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.
காந்தியின் அறவழி சென்று, நாமும் வளமான இந்தியாவை மேலும் செழிக்க செய்வோம்!!!