சூரியன் உதிக்காமல் போனால்...
கேள்வி: சூரியன் உதிக்காமலே போனால் என்ன ஆகும்?
பதில்: ரொம்ப ஜாலி. படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை...
வேடிக்கையாக பதில் தரப்பட்டுள்ளது. சூரியன் உதிக்காமல் போவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் சூரியனிடமிருந்து வழக்கமாகக் கிடைக்க வேண்டிய வெப்பம் கிடைக்காமல் பல வார காலம் அல்லது பல மாத காலம் தூசு மண்டலம் சூரியனை மறைத்தபடி இருப்பதற்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. அப்படியான நிலைமை ஏற்பட்டால். விபரீத விளைவுகள் ஏற்படும். பூமி ஒரேயடிகாகக் குளிர்ந்துவிடும். இதை எரிமலையால் ஏற்பட்ட குளிர் பருவம் (Volcanic winter) என்பர்.
கோடையில் நல்ல வெயில் அடிக்க வேண்டிய பருவத்தில் பனிப்பொழிவு (Snowfall) இருக்கும். பயிர்கள் பொய்த்து விடும். மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலைமை ஏற்பட்டுக் கலவரங்கள் மூளும். மக்கள் பட்டினியால் சாவார்கள். குளிர் வாட்டும். நோய்கள் பெருகும். இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெறும் ஊகம் அல்ல.
உண்மையில் இப்படியான நிலைமை 1816 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அதாவது அப்போது சூரியன் மறைக்கப்பட்டது. இந்தோனேசியாவில் உள்ள தம்போரா (Tambora) என்ற எரிமலையே அதற்குக் காரணம். அதற்கு முந்தைய ஆண்டில்(1815) தம்போரா எரிமலை பயங்கரமாக வெடித்தது. 5000 ஆண்டுகளில் காணப்படாத பிரம்மாண்டமான வெடிப்பு அது. அந்த எரிமலையிலிருந்து பெரும் புகை வெளிப்பட்டது. கோடானு கோடி டன் தூசு வெளிப்பட்டது.
தம்போரா எரிமலை, இந்தோனேசியா |
வானில் இருந்த தூசு காரணமாக சூரியன் வெவ்வேறு சமயங்களில் பச்சை நிறத்தில், ஆரஞ்சு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் தெரிந்தது.
தூசு மண்டலத்தால் சூரியன் மறைக்கப்பட்டபோது வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கோடைக்காலம். ஆனால் நல்ல வெயில் அடிப்பதற்குப் பதில் கடும் குளிர் வீசியது. நியூயார்க் உட்பட வட அமெரிக்கக் கண்டத்தில் பல இடங்களில் பனிப் பொழிவு (Snowfall) இருந்தது. பயிர்களை படர் பனி (Frost) தாக்கியது. பயிர்கள் பொய்த்தன. ஐரோப்பிய நாடுகளும் இதே போல கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
ஐரோப்பாவில் பல நாடுகளில் உணவுப் பஞ்சத்தால் கலவரங்கள் வெடித்தன. நோய்களால் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இந்தியாவைப் பொருத்தவரையில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பருவ மழை பொய்த்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.ஆகவே 1816 ஆம் ஆண்டை கோடையே இல்லாத ஆண்டு என்று கூறுவர்.
கிரகடோவா எரிமலை |
அதே இந்தோனேசியாவில் உள்ள டோபா எரிமலை (Toba) இன்னும் மோசம். அந்த எரிமலை சுமார் 73 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரமாக வெடித்தது. அப்போது தோன்றிய பிரம்மாண்டமான எரிமலை சாம்பல் வடமேற்கு நோக்கி நகர்ந்து இந்தியாவைக் கப்பியது.
டோபா எரிமலை, சுமத்ரா தீவு, இந்தோனேசியா. இந்த எரிமலையின் வாய் இப்போது பெரிய ஏரியாக உள்ளது. |
ஆந்திரத்தில் நிலத்தைத் தோண்டி ஆராய்ச்சி. வெள்ளையாக சாம்பல் படிந்தது தெரிகிறது. |
கீழே உள்ள படம் டோபா எரிமலை வெடிப்பின் தாக்கத்தைக் காட்டுகிறது. வட்டமான சிவப்புப் புள்ளி டோபா எரிமலை. நீல நிறப் புள்ளிகள் டோபா எரிமலைச் சாம்பல் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களைக் காட்டுகின்றன. சிவப்பு கோட்டுக்கு உள்பக்கம் வாழ்ந்த மக்களில் யாரும் மிஞ்சவில்லை என்று சில நிபுணர்க்ள் கூறியபோதிலும் பலர் அதை ஏற்கவில்லை.
டோபா எரிமலை வெடிப்பின் தாக்கம் |
இன்று தம்போரா எரிமலை அமைதியின் வடிவமாக இருக்கிறது. டோபா எரிமலை ஏரி வடிவில் அமைதியாக உள்ளது.
இவற்றை வைத்து எரிமலைகள் மனித குலத்துக்குக் கேடு விளைவிப்பவை என்று முடிவு கட்டிவிடலாகாது. பூமியில் மனித குலம் தோன்றியதில் எரிமலைகளின் வாயுக்களும் மின்னல்களும் முக்கிய பங்களித்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
தவிர, எப்போதோ எரிமலைக் குழம்புகள் வழிந்தோடிய நிலங்கள் பயிர் விளைச்சலுக்கு மிகவும் உகந்தவையாகக் கருதப்படுகின்றன். பல சமயங்களிலும் பாதுகாப்பைக் கருதி எரிமலை அடிவாரங்களிலிருந்து மக்களை வெளியேற்ற முற்பட்டால் அவர்கள் வெளியேற மறுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஆகவே எரிமலைகளை மனித குலத்தின் எதிரி என்றும் சொல்லிவிட முடியாது.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட கேள்விக்கு மீண்டும் வருவோம்.
சூரியன் உதிக்காமலே போனால் என்ன ஆகும்?
பூமி தனது அச்சில் சுழல்வதால் தான் நமக்கு சூரிய உதயமும், அஸ்தமனமும் நிகழ்கின்றன. பூமி தனது அச்சில் சுழல்வது நின்று விடுவதாக வைத்துக் கொண்டால், சூரிய உதயமே இருக்காது. பூமியின் ஒரு பாதியில் வானில் சூரியன் நிலை குத்தி நிற்கும் (பூமி உருண்டை என்பதால்). அங்கு என்றெனும் பகலாகவே இருக்கும். அப்படியான நிலையில் சூரியனின் வெப்பம் தாங்காமல் அனைத்தும் பொசுங்கிப் போய்விடும்.
பூமியின் மறுபாதியில் என்றென்றும் இரவாக இருக்கும். சூரிய வெப்பம் இல்லாமல் போய்விடுவதால் கடும் குளிர் வீசும். அனைத்தும் உறைந்து போய் விடும். பயிர்கள் வளராது. மக்கள் குளிரில் விறைத்து மடிந்து போவர். அல்லது பட்டினியால், நோய்களால் செத்து மடிவர். மொத்தத்தில் பூமியில் உயிரினமே இருக்காது. பூமி செத்து விடும். பூமி தனது அச்சில் சுழன்று, அதனால் சூரிய உதயமும் அஸ்தமனமும் இருந்தால் தான் பூமியில் உயிரினம் இருக்க முடியும். சூரியன் இல்லையேல் - அதாவது பகலும் இரவும் இல்லையேல் - உயிரினமே இராது. உயிர் வாழ்க்கையின் ஆதாரமே சூரியன் தான்.
”ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” - இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக